தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு உயர்கல்வி உறுதித் திட்டம் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உயர்கல்வி பயிலும் மாணவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.