தெற்கு கலிபோர்னியாவில் வணிக கட்டிடத்தின் மேற்கூரையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் 18 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து தென்கிழக்கே 25 மைல் தொலைவில் உள்ள புல்லர்டன் நகரின் வான் பரப்பில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அப்பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் மேற்கூரை மீது நொறுங்கி விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் தையல் இயந்திரங்கள் மற்றும் ஜவுளி கிடங்கு தீயில் எரிந்து நாசமானது. இதையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுற்றியுள்ள வணிக மையங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.








