அரசு பள்ளி மாணவிகள் ரூ1000 உதவுத்தொகைக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாளாகும்.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அதிகளவு மாணவிகள் சேர்ந்து வருகிறார்கள். அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மட்டும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதால் கிராமப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகளவு விண்ணப்பித்து உள்ளனர். உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வரை 2 லட்சத்து 8 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்து உள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகள் மட்டுமின்றி ஏற்கனவே 2, 3, 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கல்வி நிறுவனங்களில் எத்தனை பேர் ஏற்கனவே சேர்ந்து படித்து வருகிறார்கள் என்ற புள்ளி விவரமும் சேகரிக்கப்படுகிறது. இத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதால் கல்லூரிகள் தொடங்கும் அடுத்த மாதத்தில் இருந்து உதவித்தொகை வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக இருப்பதால் மேலும் பலர் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
