• Fri. Apr 26th, 2024

ஜப்பான் ஒலிம்பிக் போட்டி ; களம் காணும் திருநங்கை வீராங்கனை யார்?

Byadmin

Jul 20, 2021

ஒலிம்பிக் போட்டியில் களம்காணும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சிறப்பைப் பெற காத்திருக்கிறார், நியூசிலாந்து அணிக்காக பளுதூக்குதலில் களம் இறங்கும் லாரல் ஹப்பார்ட்.

43 வயதான ஹப்பார்ட்டின் தந்தை, ஆக்லாந்து சிட்டியின் முன்னாள் மேயர். இளம் வயதிலேயே பளுதூக்குதலில் கவனம் செலுத்திய ஹப்பார்ட் 2012ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டிகளில் பங்கேற்று வந்தார். அதன் பிறகு உடலில் மாற்றங்களை உணர்ந்த அவர் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கையாக மாறினார். எதிர்ப்பு, சலசலப்புக்கு மத்தியில் பெண்களுக்கான சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றார். 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றவர். 2019இல் பசிபிக் விளையாட்டிலும், 2020இல் ரோமில் நடந்த ரோமா உலக கோப்பையிலும் மகுடம் சூடினார்.

திருநங்கைகள் பெண்களோடு மோதுவதை அனுமதித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அவர்களுக்கு என்று பிரத்யேக விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி போட்டியில் கலந்து கொள்வதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பாக அவர்களின் டெஸ்டோஸ்டிேரானின் (ஆண்களுக்கான ஹார்மோன்) அளவு, ஒரு லிட்டருக்கு 10-க்கும் குறைவான நானோமோல்ஸ் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான நியூசிலாந்து அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும் இவர் விஷயத்தில் வீராங்கனைகள் தரப்பில் தொடர்ந்து அதிருப்தி நிலவுகிறது. திருநங்கைகளை பெண்களுக்கான போட்டியில் விளையாட வைப்பது நியாயமற்றது என்று பெல்ஜியம் பளுதூக்குதல் வீராங்கனை அன்ன வான் பெலிங்கன் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது இத்தகைய நபர்கள் பெண்களைவிட கூடுதல் வலுவுடன் இருப்பார்கள் என்பது அவர்களது எண்ணம்.

‘நாங்கள் ஹப்பார்ட்டுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். ஏனெனில் அவர்மீது இப்போது பெரிய அளவில் கவனம் செலுத்தப்படுகிறது. அவருக்கு எல்லா வகையிலும் நாங்கள் ஆதரவாக இருப்போம்’ என்று நியூசிலாந்து ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான சூப்பர் ஹெவிவெயிட் 87 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் களம் காணுகிறார் ஹப்பார்ட்.

இந்த நிலையில் எதிர்ப்பு குரல் ஒலிப்பதை அறிந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச், இப்போதைக்கு அவர் விதிமுறைக்கு உட்பட்டுதான் தேர்வாகியுள்ளார். போட்டி நடக்கும்போது விதிமுறைகளில் மாற்றம் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்து வருங்காலத்தில் இது தொடர்பாக புதிய விதிமுறை உருவாக்குவது குறித்து முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *