• Fri. Apr 19th, 2024

லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி கந்தசாமி, ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய நல்லம நாயுடு, ஆகியோருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை. எடப்பாடி பழனிச்சாமி உட்பட 5 முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்!…

By

Aug 7, 2021

லஞ்ச ஒழிப்புத் துறையின் டி.ஜி.பி.யாக உள்ள கந்தசாமி, 1996 -ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நல்லம நாயுடு ஆகியோருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், கே. டி. ராஜேந்திர பாலாஜி,ஆர் .பி. உதயகுமார் ஆகியோரை கைதுசெய்ய வலுவான ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறை தயாராகி வருகிறது.

நல்லம நாயுடு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் எஸ்.பி-யாக இருந்தபோது இவர் போட்ட வலுவான அடித்தளம்தான் ஜெயலலிதாவையும், அவரின் கூட்டாளிகளையும் சிறைக்குள் தள்ளியது. கடந்த 1996ம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் நல்லம நாயுடு. ஜெயலலிதாவை கைது செய்து, ஆறே மாதத்திற்குள் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையையும் இவர் தாக்கல் செய்தார். இது தான் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தனது முதலமைச்சர் பதவியையே இழக்க காரணமாக இருந்தது.

1997ம் ஆண்டே நல்லம நாயுடு ஓய்வு பெற்றுவிட்டாலும், திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும்.இதன் காரணமாக ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை சுமார் 20 வருடங்களாக கண்காணித்து வந்ததுடன் பல்வேறு சட்ட போராட்டங்களையும் நடத்தியவர் நல்லம நாயுடு. ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, தனது தீர்பபில் நல்லம நாயுடுவின் குற்றப்பத்திரிகையை பல முறை சுட்டிக்காட்டியிருந்தார். அந்த வகையில் லஞ்ச மற்றும் ஊழல் வழக்குகளில் நல்லம நாயுடுவுன் ஆலோசனைகளை பெற ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி வீட்டிற்கே அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில் தான், லஞ்ச ஒழிப்புத்துறையின் மிக முக்கிய அதிகாரி நல்லம நாயுடுவின் பெயர் கோட்டை வட்டாரத்தில் மறுபடியும் அடிபட ஆரம்பித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தொடங்கி கடைநிலையில் இருந்த அமைச்சர்கள் வரை, அனைவரது கடந்த கால செயல்பாடுகளையும், லஞ்ச ஒழிப்புத்துறை தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள்.

முதற்கட்டமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி,ஆர்.பி. உதயகுமார் ஆகிய 5 பேரை குறி வைத்திருப்பதாக கூறுகிறார்கள். இவர்கள் மீதான புகார்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களுடன் தான் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் கந்தசாமி கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்ததாக கூறுகிறார்கள்.

அப்போது தான் நல்ல நாயுடு குறித்து ஸ்டாலின் சில தகவல்களை கந்தசாமியிடம் கூறியதாக சொல்கிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளை தொடங்கும் முன் நல்லம நாயுடுவின் ஆலோசனைகளை ஸ்டாலின் பெற உள்ளதாக கூறுகிறார்கள்.

ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்குள்ள தலைவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாக காரணமாக இருந்த ஒரு அதிகாரியை வைத்து தங்களுக்கு ஸ்கெட்ச் போடப்படுவதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்தே வைத்திருக்கிறார் என்கிறார்கள். என்ன தான் அவர் வெளியே துணிச்சலாக இருந்தாலும் கடந்த 10 வருடங்கள் அதிகாரத்தில் இருந்தபோது செய்த சில காரியங்கள் எடப்பாடி பழனிசாமியை மட்டுமல்ல, அமைச்சர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.

இதுகுறித்து மூத்த ர.ர க்களிடம் கேட்டபோது எடப்பாடி பழனிச்சாமியையோ அல்லது எங்களது அமைச்சர்களையோ தொட்டுப்பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அது நெருப்புக்குள் கையை வைத்ததற்கு சமம்.ஏனென்றால் எங்களுக்கு மேலிடத்தில் (பி.எம்) இருக்கும் செல்வாக்கால் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கி விடுவோம் என்று எகத்தாளமாக கூறினார்கள்.சட்டப்படி எதிர்கொள்வோம் என்ற வார்த்தை ஏனோ வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *