• Fri. Jan 17th, 2025

ரூ.4,500 லஞ்சம் பெற்ற மின் வாரிய அலுவலருக்கு 2 ஆண்டு சிறை!…

By

Aug 9, 2021

மின் இணைப்பை வகைவகை மாற்றம் செய்ய 4,500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின் வாரிய அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கணேசன் தனக்கு சொந்தமாக தண்டையார்பேட்டையில் உள்ள கட்டிடத்துக்கு வழங்கப்பட்டிருந்த தொழிற்சாலை மின் இணைப்பை, வணிக மின் இணைப்பாக மாற்றக்கோரி 2011-ம் ஆண்டு தண்டையார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் கணேசன் விண்ணப்பித்துள்ளார்.

இதற்கான கட்டணம் 75 ரூபாய் என்ற போதிலும், தண்டையார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணியாற்றிய சங்கர் என்பவர் 4 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து கணேசன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரையின் பேரில் லஞ்சப்பணத்தை கணேசன் கொடுத்த போது அதை பெற்றுக்கொண்ட மின்வாரிய அலுவலர் சங்கர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், மின்வாரிய அலுவலர் சங்கர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.