டோக்கியோஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத்தொகைகளை விட இந்திய ராணுவம் கௌரவப்படுத்தியது சம்பவம் அவருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா தான் இந்திய விளையாட்டு உலகின் பேசு பொருளாக தற்போது ஊடகம்,சமூகவலைதளங்களில் இருக்கிறார்.

ஒலிம்பிக்கில் தனி நபர் ஆட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
ஒலிம்பிக் தொடரில் இந்தியா கடந்த 1920ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. பல்வேறு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்று வந்தாலும், தடகளப்போட்டியில் மட்டும் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. இந்நிலையில் பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை நீரஜ் சோப்ரா போக்கினார்.

இதனையடுத்து நீரஜ் சோப்ராவுக்கு பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்தது. அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சார்பாக, நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தது. மேலும், நீரஜ் சோப்ராவின் சிறப்பான சாதனையைப் பாராட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 8758 என்ற எண் கொண்ட ஒரு சிறப்பு ஜெர்சியை உருவாக்கவிருக்கிறது.
இப்படி பரிசுத்தொகைகள் ஒருபுறம் குவிந்துக்கொண்டிருக்க, அதற்கெல்லாம் ஒருபடி மேலாக ராணுவ கௌரவமும் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்துள்ளது. டோக்கியோவில் இருந்து டெல்லி திரும்பிய நீரஜ் சோப்ரா 10.08.2021 அன்று ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம் நரவானேவை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.
இந்த சந்திப்பிற்காக தனது பெற்றோருடன் நீரஜ் சோப்ரா சென்றிருந்தார். அப்போது நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்த ராணுவ தளபதி ஜெனரல் நரவானே, நினைவுப்பரிசு ஒன்றையும் ராணுவம் சார்பில் வழங்கினார்.
இது பரிசுத்தொகைகளை காட்டிலும், பெரிய விஷயமாக நீரஜுக்கு அமைந்திருந்தது. மேலும் நீரஜின் பெற்றோரிடம் நரவானே சிறிது நேரம் பேசினார். இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் சுபேதார்எனும் பதவியில் இருக்கிறார். இவர் ராணுவத்திலும் சிறப்பாக பணியாற்றியதற்காக இவருக்கு விஷிஷ்ட் சேவா எனதும் விருதை இந்திய ராணுவம் வழங்கியுள்ளது. இவர் சர்வதேச அளவில் விளையாட்டில் பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில்
முதலிடம் தான் பிடித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. ராஜ்புடானா ரைஃபுல்ஸ் ராணுவ மையத்தின் ஜெனரல் கான்வால் ஜீட் சிங் தில்லோன், நீரஜுக்கு ரூ.6 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 4வது இடம் பிடித்த தீபக் புனியாவுக்கும் அவர் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.