சர்ச்சையின் பிறப்பிடமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நோக்கத்தோடு சகட்டு மேனிக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியலின மக்களையும், அதைச் சார்ந்த சினிமா இயக்குநர்களையும் தரக்குறைவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணைக்கு சம்மன் அனுப்பியும், மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவானார்.
அத்தோடு நில்லாமல் என்னை கைது செய்வது கனவிலும் நடக்காது என சவால் விட்டு காவல்துறையினரை கடுப்பேற்றினார். இந்நிலையில் தான் நேற்று கேரள மாநிலம் ஆழாப்புலாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த மீரா மிதுனை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது கூட தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்ட மீரா மிதுன், என்னை இவனுங்க எல்லாம் டார்ச்சர் பண்றாங்க என காவல்துறையினரை தரக்குறைவாக பேசியது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.
தற்போது கேரளாவில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனை சென்னை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்காமல் போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால், மீரா மிதுனை சென்னை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று மதியத்திற்குள் மீரா மிதுன் சென்னை அழைத்து வரப்படுவார் என்றும், அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.