• Thu. Jan 23rd, 2025

நாளைக்குள் நீட் தேர்வுக்கு அரசு மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் – நம்பிக்கையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்!…

By

Aug 9, 2021

தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் கால அவகாசம் இருப்பதால் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் சேவையாற்றிய மருத்துவர்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பதார்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மூளைச்சாவு அடைந்த திருச்சியை சேர்ந்த செல்வராஜ் எம்பவரது உடல் உறுப்புகள் கடந்த மாதம் தானம் செய்யப்பட்டது. அந்த குடும்பத்தாருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் முதல்வர் வனிதா மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கொரோனோ காலங்களில் மற்ற மருத்துவம் சரியாக பார்க்க வில்லை என சில மருத்துவமனைகள் மீது புகார் இருந்தது. ஆனால் திருச்சி மருத்துவமனையை பொறுத்த வரை எல்லா துறைகளிலும் மிக சிறப்பாக செயலாற்றி வந்துள்ளதாக பாராட்டினார்.


நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விலக்கு பெற முதல்வர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், முதல் கூட்ட தொடரிலே சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தங்கள் நிலைபாடு எனவும் கூறினார்.
தமிழ்நாட்டிற்கு ஜீலை மாதத்தில் 19 லட்சம் தடுப்பூசிகளை கூடுதலாக ஒன்றிய அரசு அனுப்பியதாகவும், இதுவரை தமிழ்நாட்டில் 2.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு என்ன தேவை,எந்தெந்த துறைகளில் மருத்துவர்கள் தேவை என்பது குறித்து கேட்டுள்ளோம் மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும் கோரிக்கை அடிப்படையில் கண்டிப்பாக அதனை நிரப்ப நடவடிக்கை எடுப்போம் என்ற அவர், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் கூட கால அவகாசம் உள்ளதாக கூறினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பேசிய மா.சுப்ரமணியன் அனைவரும் நாளைக்குள் தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.


கொரோனோ காலகட்டத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு பணி வழங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், .தற்காலிக பணியாளர்கள் 30 ஆயிரம் பேர் உள்ளதாகவும் கூறினார். அவர்கள் அனைவரையும் நிரந்த பணியில் அமர்த்துவது சாத்தியமில்லாதது என்ற அவர், அதே நேரத்தில் யாருக்கெல்லாம் பணி வழங்க முடியுமோ அதை ஆராய்ந்து யாரும் பாதிக்காத வகையில் கண்டிப்பாக பணி வழங்கப்படும் என்றார்.