• Wed. Dec 11th, 2024

நடிகர் தனுஷ்க்கு வரி செலுத்தகெடு விதித்தது நீதிமன்றம்!…

Byadmin

Aug 6, 2021

சொகுசு காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷூக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியதோடு பாக்கி வரியைக் கட்டுவதற்கு 48 மணி நேர கெடுவும் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் தான் வாங்கியிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவரை சராமரியாகக் கேள்வி கேட்டு அவரது மனுவை டிஸ்மிஸ் செய்து அபாரதமும் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இப்போது தனுஷின் முறை. நடிகர் தனுஷும் விஜய் போலவே 2015-ம் ஆண்டு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். இந்தக் காருக்கு தமிழக வணிக வரித் துறை 60.66 லட்சம் ரூபாயை வரியாகக் கட்டும்படி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நடிகர் தனுஷ் 2016-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் துவக்க நிலையிலேயே இந்த வரியில் 50 சதவிகிதத்தை முதலில் செலுத்த வேண்டும் என்றும். அதன் பின்பு அந்தக் காரை பதிவு செய்து கொள்ளலாம் என்று அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படியே வரியில் பாதி தொகையான 30.33 லட்சம் ரூபாயை வரியாகச் செலுத்தினார் நடிகர் தனுஷ். இதையடுத்து காரும் பதிவு செய்து தரப்பட்டது. இதன் பின்பு தனுஷ் இந்தக் காரில் பல திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார். அவர் நடித்த ‘வை ராஜா வை’ படத்தில்கூட இந்தக் காரில் வந்து இறங்குவது போன்ற ஒரு காட்சியும் இருந்தது.

தனுஷ் தாக்கல் செய்திருந்த இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணக்கு வந்தது. விஜய் வழக்கை விசாரித்த நீதிபதியான எஸ்.எம்.சுப்ரமணியம்தான் இந்த வழக்கையும் விசாரித்து வந்தார்.

இதற்கிடையில் நடிகர் விஜய்க்கு இதே மாதிரியான வழக்கில் என்ன தீர்ப்பு வந்ததை அறிந்திருந்த தனுஷ் தான் இன்னும் செலுத்த வேண்டிய மீதமான வரியை செலுத்த முடிவு செய்தார். இதற்காகத் திங்கள்கிழமைவரையிலும் நேரம் கேட்டும் மனு தாக்கல் செய்தார். கூடவே அவரது வரி விலக்குக் கோரிய மனுவை வாபஸ் பெறவும் முடிவு செய்திருந்தார். அதனை இன்று நீதிபதியிடம் தனுஷின் சார்பில் அவரது வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கூடவே இந்த வழக்கை வாபஸ் பெறுவதற்காக மெமோவையும் தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்தார் வழக்கறிஞர்.

அப்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு, “ரோல்ஸ் ராய்ஸ் வாங்கும் அளவுக்கு பண வசதியுடன் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், தான் என்ன பணி அல்லது தொழில் செய்கிறோம்.. எனக் குறிப்பிடாதது ஏன்..?” எனக் கேள்வி எழுப்பினார்.

தனுஷ் தனது பணியை ஏன் மறைத்தார் என்பதற்கான காரணங்களை மனுவாகத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, “பணியையோ அல்லது தொழிலையோ வழக்கு மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா..?” என்று தனுஷ் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வியெழுப்பினார்.

“2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகாவது, வரியைச் செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே..? அதையேன் இதுவரையிலும் செய்யவில்லை…? அப்படி என்றால் உங்களது நோக்கம்தான் என்ன..?

இந்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகும், இதுவரையில் பாக்கி வரித் தொகையைச் செலுத்தாத நிலையில், இந்த மனுவை வாபஸ் பெற தான் அனுமதிக்க முடியாது…” என்று சொன்ன நீதிபதி, இந்த வழக்கில் இறுதி உத்தரவை தானே பிறப்பிப்பதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“மக்களின் வரிப் பணத்தில் போடும் சாலையைப் பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியது அவரவர் கடமைதானே..?’ எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

“ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை, நடுத்தர மக்கள்கூட வரி செலுத்திதானே வருகிறார்கள்…?” என்று நீதிபதி சுட்டிக் காட்டினார். “பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி செலுத்த முடியவில்லை என, அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா..?” எனவும் கேள்வி எழுப்பினார்.

“உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள். எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள்.. ஏன் ஹெலிகாப்டர்கூட வாங்குங்கள். ஆனால், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரித் தொகையை முழுமையாகச் செலுத்துங்கள்…” என்று நீதிபதி அறிவுறுத்தினார். “எந்தத் தனிப்பட்ட ஒருவரையும் குற்றம் சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல. அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள்படி நடக்கும்படி”யும் அறிவுறுத்தினார்.

“நடிகர் தனுஷ் நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாகக் கணக்கிட்டு, இன்று மதியம் 2:15 மணிக்குத் தெரிவிக்க வேண்டும். கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் நேரில் ஆஜராக வேண்டும்…” எனவும் உத்தரவிட்டு, வழக்கை இறுதி உத்தரவுக்காக மதியம் தள்ளி வைத்தார்.

மதியம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனுஷ் கட்ட வேண்டிய வரி பற்றிய விவரங்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது நீதிபதி தனுஷின் வழக்கறிஞரிடம், “இந்த வரி பாக்கியை இன்னும் 48 மணி நேரத்திற்குள் கட்ட வேண்டும்…” என்று உத்தரவிட்டார்.