• Wed. Apr 24th, 2024

நகைச்சுவை நாயகன் டூ மீம்ஸ் நாயகன் வரை… வடிவேல் பற்றி சிறப்பு தொகுப்பு!..

By

Aug 15, 2021

மனநலம் மருத்துவம் படித்துவிட்டுத்தான் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றில்லை. எல்லா துன்ப நேரங்களிலும் ஆபத்பாந்தவனாய் வந்து கைகொடுக்கும் சிரிப்பு மருத்துவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் வடிவேலு.


தமிழகம் பெரும் துயரங்களையும் எளிதாய் கடந்து போவதற்கு ஊக்கியாய் இருப்பர் வைகைப்புயல். இரண்டு மீம்ஸ்களோ அவரது இரண்டு வசனங்களோ போதும் எப்பேர்ப்பட்ட துயரத்தையும் கடத்தி விடும். நவீன கால நெருக்கடிகளிலிருந்து வடிவேலு அளிக்கும் மீட்பை தமிழர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். டெலக்ஸ் பாண்டியன், கைப்புள்ள, வீரபாகு, பாடிசோடா, படித்துறை பாண்டி, அலார்ட் ஆறுமுகம் என கேரக்டர்களாகவும் ஆணியே புடுங்க வேணாம், வட போச்சே, ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ, நான் அப்டியே ஷாக்காயிட்டேன், ஹைய்யோ ஹைய்யோ, அவ்வ்வ்வ்வ்… என டயலாக்குகளுடனும் நம்முடனே வாழ்பவர் வடிவேலு. . ‘ஏன்?’ ‘வேணாம்… வேணாம்’, ‘அவ்வ்வ்’, ‘ஆஹஹஹா’ ‘ம்ம்க்கும்’, ‘போவியா…’ ‘எது?’ என சாதாரண வார்த்தைகளிலேயே நர்த்தனம் புரிந்தவர் வடிவேலு. அவர் வசனத்தில் சேராத வரைக்கும்தான் அவை வார்த்தைகள். அவர் பேசிவிட்டால் அது வைரல். இவையெல்லாம் ஒன்றும் ஒரு இரவில் நடக்கிற காரியமல்ல. இதற்குப் பின்னே லட்சக்கணக்கானோரை துன்பங்களில் சிரிக்க வைத்த அவரின் நகைச்சுவைத் திறன் இருக்கிறது. மொழி புரியாதவர்களையும் தனது உடல்மொழியின் மூலமாகவே சிரிக்க வைத்துவிடுகிறவர் வடிவேலு.


மதுரையைச் சொந்த ஊராக் கொண்டவர் வடிவேலு. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த வடிவேலு, போட்டோக்களுக்கான, பெயிண்டிங் மற்றும் கண்ணாடி முகப்புகள் செய்து தரும் வேலையைச் செய்து வந்தார். அந்தக் கருப்புக் கலைஞன் நினைத்திருக்க மாட்டான். தான் பேசப் போகும் வசனங்களை எல்லாம் இந்தத் தமிழ்நாடு மனப்பாடம் செய்து கொள்ளும் என்று. ஒரு நகைச்சுவை நடிகனுக்கு முக்கியமே அவனின் உடல் மொழி தான், அதில் பிஎச்டி முடித்தவர் இந்த வடிவேலு. நாகேஷை மட்டும் கண்டு வியந்து வந்த திரையுலகிற்கு கருப்பு நாகேஷாக 1991ல் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்த ’என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் அறிமுகமானார்.


‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார்.


நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன்

விஜயகாந்த்க்கு குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார், வடிவேலு.
‘சின்னகவுண்டர்’ படமும் சக்கைப்போடு போட ஆர்.வி. உதயகுமார் மூலம் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் வடிவேலுக்கு கிடைத்தது.


வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே ஆண்டில் பல படங்களில் நடிக்கும் அளவுக்கு முன்னேறினார்.


நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் பட்டையைக் கிளப்பியவர் வடிவேலு. அடி, உதை மட்டும் வாங்கி வந்தவருக்கு மைல் கல்லாக அமைந்த படம் தேவர் மகன்.இப்படத்தில் வடிவேலுவின் நடிப்பை கண்ட நடிகர் திலகம் சிவாஜியே ‘படவா நீ பெரிய ஆள வருவடா’ என்று தன் மோதிர கையால் குட்டு வாங்கியுள்ளார்.


குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார்.


தமிழ் சினிமாவில் சாதித்த நகைச்சுவை நடிகர்கள், கவுண்டமணி கையில் அடி வாங்கி தான் இந்த நிலைக்கு வந்தவர்கள். அந்த வரிசையில் வடிவேலு மட்டும் என்ன விதி விலக்கா?, அப்படி பல படங்களில் அடி, உதை வாங்கி மெலிந்த தேகத்துடன் கலக்கினார்.

வடிவேலுவின் காமெடியோ முற்றிலுமாக கவுண்டமணியிடம் இருந்து வேறுபட்டது. அது தன்னைத்தானே கிண்டல் செய்துகொண்டது. சுய விமர்சனம் – சுய பகடி என்ற அடிப்படையான நல்ல அம்சத்தைத் தமிழர்களிடம் அறிமுகப்படுத்தியது.


தொடக்கத்தில் வடிவேலு நடித்த ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ,‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து‘போன்ற திரைப்படங்களில் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது.


ஆண் நகைச்சுவை நடிகர்களே அடி வாங்கியும், அடித்தும் நடித்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் நகைச்சுவை நடிகை ஒருவரிடம் அடி வாங்கி புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார் வடிவேலு. நம்ம வீட்டிலேயும் இப்படி தான் நடக்குது என ஆண்களும், நமக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என பெண்களும் சிரித்து கொண்டார்கள். காலம் மாறிப்போச்சு, மாயி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவையில் வடிவேலு – கோவைச்சரளா கூட்டணி சக்கைப்போடு போட்டது.

‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப் புருஷன், மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’ என வடிவேலு நடித்த படங்களின் நகைச்சுவை காட்சிகள் பட்டித்தொட்டியெங்கும் சிரிப்பலையை ஏற்படுத்தின.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய வடிவேலு, 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடிக்கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது.

நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் வடிவேலுவின் கிராஃபை எகிற செய்தது.வடிவேலு நிகழ்த்திய முக்கியமான சாதனை, மொழியமைப்பையே தன் வசப்படுத்திக்கொண்டது. சூட்டிங்கில் கால் பிசகிக்கொள்ள, ஓய்வில் இருந்தார் வடிவேலு. குணமாவது தாமதமாக, காலை விந்தி விந்தி நடிப்பதையே ஸ்டைல் ஆக்கி நடித்த படம்தான் ‘வின்னர்’. 2003ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரம் வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இன்று வரை ‘வின்னர்’ காமெடிதான் அவருக்கு ஆல்டைம் பெஸ்ட். அவருக்கு மட்டுமல்ல நமக்கும்தான்.


‘வேணாம் வலிக்குது, அழுதுருவேன்’ காட்சியை 16 டேக்குகள் எடுத்துள்ளனர். காரணம் நடிகர் ரியாஸ்கான் சிரிப்பை அடக்கவே முடியாமல் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். ஒவ்வொரு டேக்கிலும் வடிவேலு அதை வெவ்வேறு மாடுலேஷன்களில் சொல்லி மெருகேற்ற கடைசியில் ஒரு ப்ரேக் விட்டுத்தான் அதை படமாக்கியிருக்கிறார்கள். இன்றும் அந்தக் காட்சியில் ரியாஸ்கான் கொஞ்சம் கட்டுப்பாடுடன் சிரிப்பது கவனித்து பார்த்தால் தெரியும்.


எப்போதும் வடிவேலுவின் காட்பாதர் என்றால் நடிகர் ராஜ்கிரண் தான். அவர் போட்ட பிச்சை தான் நான் இந்த அளவிற்கு உயர காரணம் என வெகுளியாக பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் எப்போதுமே நாயகர்களுக்கு இணையான மக்கள் செல்வாக்கும் வரவேற்பும் நகைச்சுவை நடிகர்களுக்கும் உண்டு. என்.எஸ்.எஸ்.கிருஷ்ணன் காலத்திலிருந்து வடிவேலுவின் காலம் வரை அது தொடர்கிறது என்றாலும் தன் முன்னோடி நகைச்சுவை நடிகர்களில் இருந்து வடிவேலு வேறுபட்டு, நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் ஏராளம்.


கதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியம். இவ்விரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்திய வடிவேலு, ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைத்தார்.


ஊருக்குள் வாய்ச்சவடால் விட்டுத் திரியும் மனிதர்களைத் திரையில் பிரதிபலித்து காமெடி செய்தார் வடிவேலு. ஹீரோக்களின் பன்ச் டயலாக்குகள், அரசியல் தலைவர்களின் நம்பமுடியாத உறுதிகள், போலி ஆவேசமும் வீராப்பும் நிறைந்த மேடைப் பேச்சுகள் ஆகியவற்றைக் காலம் காலமாகப் பார்த்துப் பழகிய தமிழர்கள், உதார் மனிதர்களை காமெடி செய்து அம்பலப்படுத்திய வடிவேலுவை ஆரவாரமாகக் கொண்டாடினார்கள்.


1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த வடிவேலு, 2006 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார்.


23-ம் புலிகேசியாகக் கோணங்கித்தனம் செய்யும் அரசனாக நடிக்கும் அதேவேளையில் புரட்சிக் குழுவைச் சேர்ந்த போராளியாகவும் நடித்திருப்பார். இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


எந்த நடிகனின் உடல்மொழியையும் நினைவூட்டாத தனிச்சிறப்பான உடல்மொழி அவருடையது. வசனங்கள் எதுவும் இல்லாமலேயே வெறும் முகபாவனை மற்றும் உடல்மொழியால் மட்டும் திரையரங்கையே அதிரச்செய்யும் சிரிப்பொலியை அவரால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.
ஒவ்வொரு திரை நாயகனுடனும் போட்டி போட்டு நடித்தவர் வடிவேலு. காதலன் மற்றும் மனதைத் திருடி விட்டாய் படத்தில் பிரவுதேவாவுடன் அவர் சேர்ந்து செய்த காமெடி இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பார்க்கலாம். பார்த்திபனுடன், பிரசாந்துடன், முரளியுடன், பிரபுவுடனும், சரத்குமாருடனும், இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் நகைச்சுவை தொலைக்காட்சிகளுக்கான வாழ்நாள் புட்டேஜ்.


எல்லாவற்றுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜியுடன் நடித்த சந்திரமுகி இன்றும் குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிக்கும் நகைச்சுவைக் காட்சியாக இருக்கிறது. அப்படம் தந்த வெற்றியால் வடிவேலுவின் கால்சீட்டைப் பெற்ற பின்னரே குலேசன் படம் ஆரம்பமானது. பல படங்களின் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடி மலையளவு உதவி செய்திருக்கிறது.
வெட்டியானாக, தாய்மாமனாக, போலி மருத்துவராக, வெட்டியாக இருக்கும் கணவனாக, வார்டனாக, கூலியாக என சமூகத்தில் வசிக்கும் அனைத்து தரப்பு மனிதர்களையும் அவர்களது வார்த்தைகளையும் உடல்மொழியையும் திரைமொழியாக்கி நம்மை மகிழ்வித்த கலைஞன் வடிவேலு.


(வார்டன் – விஷால் படம்) ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வேறு வேறு மாதிரியான நடிப்புகளை வழங்கியவர் வடிவேலு. டெலக்ஸ் பாண்டியன் போலீசுக்கும் மருதமலை பட போலீசுக்கும் வித்தியாசம் காட்டுவார். தீப்பொறி திருமுகத்துக்கும், நாய் சேகருக்கும் வித்தியாசம் காட்டுவார். ஒவ்வொரு படத்திற்கும் அவர் காட்டும் காட்டும் அக்கறையும், ஆர்வமும் அவரை மகாகலைஞனாக உருவாக்கியது என்றால் மிகையல்ல. புகழின் உச்சத்தில் இருந்த அவர் ஆனந்த விகடனில் எழுதிய வெடி வெடி வேலு வடிவேலுவும், அவள் விகடனில் எழுதிய வேலு பேசுறேன் தாயும் இன்னும் அவரை மக்களிடத்தில் அதிகமாய்க் கொண்டு சேர்த்தது.


கடந்த சில ஆண்டுகளாக அவருக்கான இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. காரணம் அரசியல். தனிப்பட்ட பகையில் விஜயகாந்திற்கு எதிராக களமிறங்க அது வடிவேலுக்கு சங்கடங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. படமில்லாமல் போனார். ஆனால் அனைவரது வீட்டு தொலைக்காட்சிகளிலும் அவர் தோன்றிக்கொண்டே இருந்தார். அதுதான் அவருக்கான வெற்றி.
குழந்தை ஒன்று கோமா நிலைக்குச் சென்று விட மருத்துவர்கள் குழந்தைக்கு எது மிகவும் பிடிக்கும் எனக் கேட்டிருக்கிறார்கள். வடிவேலுவின் காமெடி என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியானால் தினமும் அதைப் போட்டுக் காண்பியுங்கள் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார். 40 – 50 சிடிகளை வாங்கி தினமும் ஒரு மணி நேரம் அந்த அறையில் வடிவேலுவின் காமெடி ஓடியிருக்கிறது. சில நாட்களில் அந்தக் குழந்தை சிரித்து மகிழ்ந்திருக்கிறாள். வடிவேலுவைச் சந்தித்த அந்தப் பெற்றோர் வடிவேலுதான் எங்கள் தெய்வம் என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். இதையே தனக்கான மிகப்பெரும் விருது என பெருமிதம் கொண்டார் வடிவேலு.


வடிவேலுவின் மனசுக்குப் பிடித்த நடிகைசரோஜா தேவிதான். ‘ஆதவன்’ படப்பிடிப்பில் அவரிடமே ‘நில்லடி நில்லடி சீமாட்டி’ பாடலை முழுதாகப் பாடிக் காட்டி நடித்து சபாஷ் வாங்கியதைச் சந்தோஷத்தோடு குறிப்பிடுவார்.


வடிவேலுவின் சொந்த ஊர் மதுரையிலுள்ள வைகை. அதுவே இவருக்கு அடைமொழியாக வந்துவிட்டது. கவுண்டமணி, செந்தில் கூட்டணியில் தொடங்கி, விவேக், கருணாஸ் போன்ற பலருடன் நகைச்சுவையில் தூள் கிளப்பியவர்.


தன் முதல் கார் டாடா சியாராவை இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார், வடிவேலு. முதலில் வாங்கிய சொத்து என்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த காரை அவரே துடைத்துச் சுத்தப்படுத்துவார். டி.எம்.சௌந்தர்ராஜனின் வெறிபிடித்த ரசிகர் வடிவேலு. அவர் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களை அப்படியே ராகம் போட்டுப் பாடுவார். சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு இருந்துவிட்டால் இளம் தலைமுறை ஹீரோக்கள் அவரைத் தாங்கிக் கொண்டாடுவார்கள். சிரிப்பு வெடிகளைக் கொளுத்திப் போட்டு அதிரவைப்பார். வடிவேலுவின் பயங்கர ரசிகர் விஜய்.
சந்திரபாபு, தங்கவேலு, சுருளிராஜன் தான் வடிவேலுவின் நகைச்சுவை குருக்கள். தன்னை இவர்களின் கலவை என நடிகர் ரஜினி ஒரு மேடையில் சொன்னதைச் நினைத்து சிலாகிப்பார். அதே போல் தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த ரயில் பயணத்தையே அதிகம் விரும்புவர் வடிவேலு.
விடுமுறை கிடைத்தால், குடும்பத்தை அள்ளிப்போட்டுக்கொண்டு குற்றாலத்துக்குப் போய்விடுவார். வெளிநாடு என்றால் பிடித்த ஊர் லண்டன்தான். ‘தேம்ஸ் நதியில மிதக்கிறது வடிவேலுக்கு பிடித்த விசயம். இதே போல் மீன் குழம்பு வெறியர்.


450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வடிவேலுவுக்கு காலம் மாறிப்போச்சு’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘தவசி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘காத்தவராயன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.


‘சந்திரமுகி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்பேர்’ விருது கிடைத்தது. தனது திரைப்பட வசனங்களை ஒரு ஒட்டுமொத்த மாநிலத்தின் பேச்சு மொழியாக்கிய பெருமை வைகைப்புயல் வடிவேலுவை மட்டுமே சேரும். மதுரை பேச்சு வழக்கை பாகுபாடில்லாமல் பிரபலமாக்கி தமிழ்நாட்டின் பேச்சு வழக்காக மாற்றியது வடிவேலு என்னும் மகா கலைஞனின் பெரும் சாதனை. திரைமொழி இருக்கும் வரை வடிவேலுவின் நடிப்பு செல்லுலாய்டில் உறைந்தே இருக்கும். நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் வடிவேலு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *