தென்காசி மாவட்டம், உடையாம்புளி கிராமத்தில் வீட்டின் முன்பு மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஓடைமரிச்சான் இரண்டாம் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட உடையாம்புளி கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள நான்கு தெருக்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் வாராங்கால் வழியாக கழிவுநீர் செல்ல முடியாமல் தெருக்களில் கழிவு நீர் ஆறுபோல் தேங்கி உள்ளது. வீட்டின் முன்பு கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள்.
இந்த பகுதியில் கழிவு நீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகின்றன. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் உள்ளது. கிராமத்தில் 2 குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். கழிவுநீர் துர்நாற்றத்தால் வயதானவர்கள் பாதிக்கப்படும் நிலையில், குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் வாந்தி பேதி ஏற்படுகிறது.
இந்த அவல நிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடமும், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த உடையாம்புளி கிராமமக்கள் 50க்கு மேற்பட்டோர் இன்று தெருக்களில் தேங்கிகிடக்கும் சாக்கடை நீரில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடையாம்புளி கிராமத்தில் வசிக்கும் மக்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற மாவட்ட ஆட்சியர் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிடவேண்டும். வீடுகளில் தெருக்களில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் செல்வதற்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கழிநீர் செல்வதற்கு கிராம ஊராட்சி சார்பில் தற்காலிக சீரமைப்பு பணி நடைபெற்றது.