

காரைக்குடியில் மனைவியின் தற்கொலைக்கு காரணமான கள்ளக் காதலன் வெட்டிக் கொலை. இருவர் கைது காரைக்குடி தேனாற்று பாலம் அருகே, கள்ளகாதல் விவகாரத்தில் ஒருவர் வெட்டி கொலை.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரின் உடனடி உத்தரவின் பேரில் கொலையாளிகள் ஒரு மணி நேரத்தில் கைது செய்து போலீஸார் நடவடிக்கை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(44). இவர் தேவகோட்டை ரஸ்தா குப்பை கிடங்கு அருகே இரும்பு பட்டறை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று காரைக்குடி தேனாற்று பாலம் அருகே மகாலிங்கம் கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து, காரைக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, சம்பவம் இடம் வந்த போலீசார் மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் சம்பவ இடத்தில் முகாமிட்டு, தனிப்படை அமைத்து உடனடியாக கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
மாவட்ட கண்காணிப்பாளரின் உத்தரவையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், காரைக்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தேவகோட்டையை சேர்ந்த சுந்தரபாண்டி, கார்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட மகாலிங்கத்திற்கும், தேவகோட்டையை சேர்ந்த ராதா என்பவருக்கும் கடந்த 2 வருடத்திற்கு மேலாத கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது.
மனைவியின் கள்ளதொடர்பு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவர் மணிகண்டனுக்கு தெரியவந்ததையடுத்து, அவர் ராதாவை கண்டித்துள்ளார். கள்ள தொடர்பு கணவனுக்கு தெரிய வந்ததால், கடந்த 1 வருடத்திற்கு முன்பு தனது இரு குழந்தைகளையும் விட்டு, விட்டு ராதா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் குழந்தைகள் இரண்டும் தாய் இல்லாமல் தவித்து வந்ததை கண்டு, ராதாவின் கணவர் மணிகண்டன், மற்றும் ராதாவின் சகோதரர்கள் சுந்தரபாண்டி, கார்த்தி ஆகிய மூவரும் இதற்கு காரணமான மகாலிங்கத்தை பழி வாங்க திட்டமிட்டு, இன்று அதனை நிறைவேற்றியுள்ளதாக தெரியவந்தது.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராதாவின் சகோதரர்கள் இருவரும் கைதான நிலையில்,தப்பியோடிய ராதாவின் கணவர் மணிகண்டனை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் கொலையாளிகளை பிடித்து கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தனது பாராட்டு தெரிவித்தார்.

