• Fri. Mar 29th, 2024

ஏழைகளின் பங்காளர் அன்னை தெரசா

ஏழைகளின் பங்காளரான அன்னை தெரசா பிறந்த தினம் இன்று….

அல்பேனியா என்கிற ஒரு சிறிய நாட்டிலே ஒரு சிறுமலர் 1910 ஆகஸ்ட் 26 அன்று பூக்கிறது. அம்மலருக்கு அப்பெற்றோர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர். அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு அப்போது தெரியாது, நாம் மரித்த பிறகும் பல நூற்றாண்டுகள் உலகம் போற்றும் மாமனுஷியாக இருக்கப்போகிறோம் என்று. இவ்வுலகம் அன்பின் திறவுகோல்களை அனைவரிடம் வழங்குகிறது. அதை பலர் தொலைத்து விடுகின்றனர். பலர் பயன்படுத்த தெரியாமல் தவிக்கின்றனர். சிலர் மட்டுமே அந்தத் திறவுகோலின் வழியாக பல மனங்களைத் திறந்து அவைகளை வென்றெடுக்கின்றனர். அவர்களை தான் வரலாறும் தன் பக்கங்களில் வரவு வைத்துக்கொள்கிறது.

அப்படிப்பட்டதொரு கருணையே வடிவான தேவதையின் 111 வது பிறந்த நாள் இன்று. மிஷனெரிஸ் ஆப் சாரிட்டி என்ற அமைப்பின் மூலம் ஆதரவற்றோர்களுக்கான வாழ்வைத் தேடி எடுத்த மாதரசியின் பிறந்த தினம் இன்று.

1929 ல் டார்ஜிலிங்கில் துறவறப் பயிற்சியை மேற்கொண்ட தெரசா அப்பகுதியில் நிலவிய வறுமையைக் கண்டு துயருற்றார். தெருவை வீட்டைப் போலவும், நீரை ஆகாரத்தைப் போலவும் வறுமையை ஆடையைப்போலவும் அணிந்து கொண்டவர்களை எண்ணி வருந்தி அவர்களுக்காக தன் வாழ்வை அர்பணிக்க எண்ணினார் அன்னை தெரசா. உறவினர்களே தீட்டு என துரத்தி விட்டு தொழு நோயாளிகளை தன் குழந்தையைப் போல கரங்களில் ஏந்திக் கொண்டார். புழுவிலும் அற்பமாக எண்ணப்பட்டவர்களை மனிதர் எனும் நிலைக்கு உயர்த்தியவர் அன்னை தெரசா.

பொது வாழ்விற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு அவமானங்களே முதல் படியாய் வந்து நிற்கும் என்பது அன்னை தெரசாவிற்கும் நிகழ்ந்தது. ஒருமுறை செல்வந்தர் ஒருவரிடம் ஆதரவற்ற பிள்ளைகளுக்காக யாசகம் கேட்டு கைகளை ஏந்தி நின்றார். அந்தச் செல்வந்தரோ, அன்னை தெரசாவின் கைகளின் மீது காரி உமிழ்ந்தார். அதைத் ஏற்றுக் கொண்ட அன்னை தெரசா, ‘எனக்கு இது போதும். என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்’ என மன்றாடினார். அந்த செல்வந்தரின் மனது ஒரு நொடியில் உடைந்து சுக்குநூறானது. அன்பைத் தவிர என்ன இருந்து விடப்போகிறது இந்த உலகில்?

அன்பு ஒரு மிகப் பெரும் ஆயுதம். யாரையும் தாக்கி காயப்படுத்தாத ஆயுதம். அந்த ஆயுதத்தின் மூலம் இவ்வுலகை வென்றதாலேயே நூற்றாண்டு கடந்தும் நினைவு கூறப்படுகிறார் அன்னை தெரசா.

இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும் உங்கள் சேவையின் புகழ் நிலைத்திருக்கும் அன்னையே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *