அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உட்பட 52 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் சென்னையில் மட்டும், 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அரசு ஒப்பந்தபணிகள் வாங்கி தருவதாக கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்து விட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, கோவையில் பல்வேறு திட்டங்களில் கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழலில் ஈடுபட்டதாகவும், அதிமுக ஆட்சியில் இருந்தபோது தனது பதவியை தவறாக பயன்படுத்தி, ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாகவும் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.விடுதியில் உள்ள அறையில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ரெய்டு விவகாரத்தை தொடர்ந்து குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் காலை முதலே குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து வீட்டின் முன்பு தடுப்புகளை வைத்து போலீசார் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக தொண்டர்கள் பேரிகார்டு பலகையை தூக்கி வீசி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ…