• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

Byadmin

Jul 9, 2021

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளை முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடந்தன. 100 நாட்கள் போராட்டம் நடந்த நிலையில் கடைசி நாளில் 2018ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று ஆட்சியர் அலுவலகம் நோக்கி மனு கொடுக்க நடந்த பேரணியில் ஏற்பட்ட வன்முறையில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் தமிழக அரசு அளித்த அறிக்கையை அடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம், வழக்கை முடித்துவைத்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்குத் தள்ளிவைத்ததுடன், இந்த வழக்கை முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரைக் கிளையில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மதுரைக் கிளையில் உள்ள வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற ஒப்புதல் அளித்தனர்.