மதுரை மாநகர் நரிமேடு மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த பூர்ண சந்திரன் (40) என்பவரே உயிரிழந்தவர். MBA பட்டதாரியான அவர், மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்ததுடன், அவ்வப்போது சிறிய சரக்கு வாகனம் மூலம் பழங்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல், மதுரை மாநகராட்சி அலுவலகம் மற்றும் அவுட்போஸ்ட் பெரியார் சிலை அருகே தனது சரக்கு வாகனத்தை நிறுத்திவைத்த பூர்ணசந்திரன், அங்கிருந்த போலீஸ் பூத்திற்குள் சென்று கதவை பூட்டிய பின்னர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் பூத்திலிருந்து அலறல் சத்தத்துடன் தீப்பற்றியதை கண்ட பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி துணைமேயர் நாகராஜன், தல்லாகுளம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தபோது, போலீஸ் பூத்திற்குள் உடல் முழுவதும் எரிந்த நிலையில் பூர்ணசந்திரன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து தல்லாகுளம் காவல்துறையினர் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை எனக் கூறி, சம்பவத்திற்கு முன்பு பூர்ணசந்திரன் தனது நண்பனுக்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, அவரது செல்போனை கைப்பற்றிய தல்லாகுளம் காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியார் சிலை அருகே நடந்த இந்த சம்பவம், மதுரை மாநகரில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




