கோயம்புத்தூரின் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ குதிரையேற்ற பயிற்சி மையத்தைச் சேர்ந்த திறமையான இளம் வீரர்களான ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர், 2025-ஆம் ஆண்டு தென்னக மண்டலத்திற்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நடைபெற்றது. ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்தி பாலாஜி மற்றும் இந்நிறுவனத்தின் இயக்குனர் பாரதி செய்தியாளர்களை சந்தித்தனர்.
அவர்கள் கூறியதாவது :
கடந்த 9 ஆண்டுகளாக ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ மாணவர்கள் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுவருவதாகவும், இப்போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், 250 திறமைமிக்க மிகச்சிறந்த இளம் குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்ற நிலையில் அதில் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ மாணவர்கள் 10 பேர் கலந்துகொண்டு, 6 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என பாதகங்களை குவித்துள்ளனர்.

ஷோ ஜம்பிங் மற்றும் டிரஸாஜ் எனும் 2 வேறு குதிரையேற்ற போட்டிகளில் சிறந்த பங்களிப்பை இந்த சாம்பியன்ஷிப் நிகழ்வில் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
தொடர்ந்து பேசிய சக்தி பாலாஜி மற்றும் பாரதி, குதிரையேற்ற போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதிலும் வெற்றி பெறுவதிலும், பதக்கங்களை குவிப்பதிலும் தேசிய அளவில் கோவை முதல் 3 இடங்களில் உள்ளது எனவும் இதற்கான சிறந்த வீரர்களை ஈக்வைன் ட்ரீம்ஸ் தொடர்ந்து உருவாக்கி வருவதாக அவர்கள் கூறினர்.




