காரைக்கால் மாவட்ட நகரப் பகுதியில் உள்ள மார்க்கெட் வீதியில் இருக்கும் மின்கம்பத்தில் பழுது பார்க்கும் போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து மின்துறை ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர் சேத்தூரை சேர்ந்த நாகராஜ் என்கின்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் துடித்துக் கொண்டிருந்த நாகராஜை அருகில் வேலை பார்த்த சக ஊழியர்கள் மீட்டு உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த விபத்து குறித்து நாகராஜின் உறவினர்கள் மின்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கியதில் அதிக அளவு உடலில் காயங்கள் இருப்பதால் அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் நகரப் பகுதியில் மின்துறை அதிகாரியின் அலட்சியத்தால் உயர் மின்னழுத்த கம்பியில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




