உலகை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வேகமெடுத்துள்ளதால், மக்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்றும் வகையில், தேனி மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் வீரபாண்டியில் யாகவேள்வி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
தேனி மாவட்டம், வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் அருகே முல்லை ஆற்றங்கரை பகுதியில், ஸ்ரீ கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் நேற்று காலை 10 மணியளவில், சிவசேனா கட்சி மாவட்ட தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் யாக வேள்வி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்த யாக பூஜை நடந்தது. கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையிலும், அவர்கள் சுபிட்சமாக வாழ வேண்டியும் இந்த பூஜை நடந்தது என, சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் குரு ஐயப்பன் தெரிவித்தார். இப்பூஜையில் மாவட்ட, நகர, ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.