• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

யாதும் ஊரே யாவரும் கேளீர்திரைப்பட விமர்சனம்

Byதன பாலன்

May 21, 2023

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின்வலியைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர்.
2000 ஆண்டுகளுக்குப் பின் நம் இனம் இப்படி ஒரு வலியைச் சந்திக்கும் என்று கணித்தாரோ கணியன்பூங்குன்றன்? அவர் அன்றைக்குச் சொன்ன சொல் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது இந்தப்படம் பார்க்கும்போது புரியும்.

ஈழத்திலிருந்து தப்பி கேரளாவுக்கு வரும் விஜய்சேதுபதி, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய சூழலில், அவருக்கு ஒரு போலியான அடையாளத்தை உருவாக்குகிறார்கள்.
அதனால் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றின் முடிவென்ன? என்பதுதான் படம்.

ஈழத்தமிழ் அகதியாக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அகதிஎன்ற சொல்லின் துயர்மிகு பொருளை தன் நடிப்பின் மூலம் எல்லோரையும் உணர வைத்திருக்கிறார். இசைத்துறையில் திறனிருந்தும் குடியுரிமை இல்லாததால் நிராகரிக்கப்படும் காட்சிகள்,ஈழத்தமிழர் வாழ்க்கை குறித்து உலகின் மனசாட்சியைத் தட்டுகின்றன.விஜயசேதுபதியைக் காதலிக்கும் மேகாஆகாஷ், காதலில் கசிந்துருகுவதும் புனிதன், கிருபாநிதி என்கிற இரண்டு பெயர்ச்சிக்கலால் தவிப்பதும் மூலக்கதைக்குப் பலம் சேர்க்கின்றன.

ஈழத்ததமிழர்களை தாய்த்தமிழகத்திலுள்ள பிறமொழி அதிகாரிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை மகிழ்திருமேனியின் வேடத்தை வைத்து வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். மகிழ்திருமேனியின் குரல் அதற்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது.மறைந்த நடிகர் விவேக் வரும் காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்க்கும் மகிழ்வும் அவர் இல்லையே என்கிற வருத்தமும் ஒருசேர வருகின்றன.

தபியா, கனிகா, கரு.பழனியப்பன், மோகன்ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் முக்கியமான வேடங்கள் அமைந்திருக்கின்றன.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். கதாநாயகன் இசைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால் பின்னணிஇசையில் கூடுதல் கவனம் எடுத்திருக்கிறார்.

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவில் ஈழத்துக்கொடுமைகள் கண்களில் உறைகின்றன.கலை இயக்குநர் வீரசமரின் உழைப்பு படத்துக்குப் பலம்.ஜான் ஆபிரகாமின் படத்தொகுப்பு இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்.சில பல குறைகள் இருப்பினும் ஈழத்தமிழ் அகதியை கதைநாயகனாக்கி, பேசாப்பொருளைப் பேசத் துணிந்தமைக்காக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்தைப் பாராட்டலாம்.