தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தாமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்து விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீண்டகால தமிழக சட்டப்பேரவை மரபின்படி, ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், நிகழ்வின் இறுதியில் தேசியகீதம் பாடுவதும் நடைமுறையாக இருந்து வருகிறது.
ஆனால், இந்த நடைமுறை மரபை மாற்றி, தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடவேண்டும் என வலியுறுத்தி, அது ஏற்படாத நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,சட்டசபையில் இருந்து வெளியேறினார் என ஆளுநர் மாளிகை தெரிவித்தது. ஆளுநரின் இந்த செயலுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. ஆளுநரின் செயல்பாடு அவருக்கு தமிழக ஆளுநராக செயல்பட விரும்பும் இல்லாததையே காட்டுகிறது. அவர் விளம்பரம் தேடும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார். அரசியல் சாசனத்தை மீறி அவர் நடந்து வருகிறார். எனவே அவரை நீக்க வேண்டும்” என அந்த மனுவில் கூறியுள்ளார்.