• Mon. May 6th, 2024

குரு வழிபாடே சனாதன தர்மம்.., ஆன்மீக பேச்சாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேச்சு..!

ByKalamegam Viswanathan

Jan 9, 2024
குரு வழிபாடே சனாதன தர்மம் என்று ஆன்மிக பேச்சாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு..,
மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் முப்பதாவது ஆண்டு ஆராதனை வைபவம் மதுரை எஸ். எஸ். காலனி பிராமண கல்யாண மஹாலில் நடைபெற்றது. நிகழ்வில் ஆன்மீகப் பணிகளில் சிறந்து விளங்கும் நாம சங்கீர்த்தன கலைஞர் நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர், மதுரை சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி முதல்வர் மிருதங்க வித்வான் டாக்டர் தியாகராஜன், ஆன்மிக பேச்சாளர் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு ஸ்ரீ மகா பெரியவா விருதினை தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வழங்கினார். 
விழாவில் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் நடமாடும் தெய்வம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது..,
ஹிந்து சமயத்தில் இறை வழிபாட்டை விட குரு வழிபாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பது மரபாகும். காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர் வாழ்நாள் எல்லாம் பாரதம் முழுவதும் நடந்து சென்று தர்மத்தை நிலைநாட்டினார். அவரை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிவதோடு எந்த சூழ்நிலை இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்குவதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அவரின் பெயரில் மதுரையில் நடைபெற்று வரும் அனுஷத்தின் அனுகிரகம் மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் அந்த சிறிய பணியினை செய்து வருகிறது. நாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி அரிசியை ஏழை எளிய மக்களுக்காக வழங்க வேண்டும் என்ற திருமூலரின் வழி நின்று செயல்படுத்தி ஸ்ரீ மகா பெரியவர் அருளினார். அதுவே பிடியரிசி திட்டம் என புகழ்பெற்று விளங்குகிறது. மகான்கள் நடமாடும் தெய்வங்களாக விளங்கி வருகிறார்கள். இந்து சமயத்தில் எல்லா  கடவுள்களையும் குருவாகவே வழிபட்டு வருகிறோம். ஒரு தலத்திற்கு சென்றால் அங்கு ஒரு இரவு தங்கி விடியற்காலையில் அங்குள்ள திருக்குளத்தில் நீராடி வழிபாடு செய்வதின் மூலம் இறைவனை குருநாதராக வருகிறார் என்பார் தாயு மானவர். 
தற்போது பல திருத்தலங்களில் புனித தீர்த்தங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதும் அதன் பெருமையை நாம் உணராமல் இருப்பதும் வேதனைக்கு உரியதாகும். இறைவனே குருவடிவில் நமக்காக மனித உடல் தாங்கி வந்து வழிகாட்டி நம்மை நெறிப்படுத்துவதால் அவர்களை நடமாடும் தெய்வம் என்று அழைத்து மகிழ்கிறோம். மகான்கள், மனிதர்களுக்கு செய்யும் சேவையே மகேஸ்வரனுக்கு செய்யும் சேவையாக நமக்கு சொல்லித் தருகிறார்கள். நாமும் மனித வடிவில் இருக்கும் குருநாதர்களை வழிபாடு செய்து மனித குலத்திற்கு சேவை செய்து சமுதாயத்தை மேம்படுத்துவோம். இவ்வாறு ஆன்மீக பேச்சாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார்.
அதனை தொடர்ந்து மாலையில் நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினரின் ஆண்டாள் கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *