புதுச்சேரியை காராமணிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கரபிரியா @ சான் ரேச்சல் (23), இவர் கடந்த ஆண்டு சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு 100 அடி சாலையில் வசித்து வருகிறார், கருப்பு நிறம் கொண்ட இவர் மாடலிங் துறையில் மிஸ் புதுச்சேரி 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, Queen of madras 2022, 2023 MISS AFRICA GOLDEN INDIA போட்டியில் இரண்டாவது இடம் என பல விருதுகளை பெற்றுள்ளார்.

அது மட்டுமின்றி இவர் மாடலிங் துறைக்கு வரும் பெண்களுக்கு பயிற்சியும் நடத்தி வந்தார். இந்த நிலையில் ரேச்சல் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி தனது தந்தை வீட்டுக்கு வந்தவர் அங்கு அதிக அளவில் தூக்கம் மற்றும் இரத்த கொதிப்பு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனை கண்ட அவரது சகோதரர் கொளதம் மற்றும் தந்தை காந்தி ஆகியோர் ரேச்சலை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனிடையே அங்கு சிகிச்சை பெற பிடிக்காமல் யாரிடமும் சொல்லாமல் ரேச்சல் தனது தந்தை வீட்டிற்கு சென்று தனது உடமைகளை எடுத்து கொண்டு தனது கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே சென்று இரண்டு நாட்களில் அவரது கை கால்கள் வீக்கம் அடைந்ததை அடுத்து அவர் மூலகுலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவரை மேல் சிகிச்சைகாக ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அடுத்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேச்சலின் தந்தை காந்தி உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு பேஷன் நிகழ்ச்சிகள் நடத்த ரேச்சல் கடன் பெற்றதாகவும் அது குறித்து தனது கணவரிடம் கூட கூறாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும், தனது மரணத்திற்க்கு கணவரோ, மாமியாரோ காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அவருக்கும் அவரது கணவருக்கும் ஏதேனும் பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாடல் அழகி தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் சக மாடலிங் அழகிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.