புடவை என்பது இந்தியாவின் பாரம்பர்யங்களில் ஒன்று. இந்நிலையில் அனிதா செளத்ரி என்ற பெண் பத்திரிகையாளர் , சில தினங்களுக்கு முன், “புடவை என்பது ஸ்மார்ட்டான ஆடை இல்லை என்பதால், டெல்லி உணவகத்தில் ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஆடை என்பதற்கான வரையறையை எனக்குத் தெளிவுபடுத்துங்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டு, அமித்ஷா, டெல்லி காவல்துறை , தேசிய பெண்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கங்களை டேக் செய்திருந்தார். மேலும் அதில் வீடியோ ஒன்று இணைக்கப்பட்டு இருந்தது
அந்த வீடியோவில், ஆவேசமாகப் பேசும் பெண் ஒருவரிடம், உணவகத்தில் பணியாற்றும் கோட் சூட் அணிந்த பெண் ஒருவர், “நாங்கள் கேஷுவல் ஆடைகள் அணிந்திருக்கும் நபர்களை மட்டும்தான் உணவகத்தில் அனுமதிப்போம். புடவை ஸ்மார்ட்டான கேஷுவல் ஆடை இல்லை” என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ, சம்பந்தப்பட்ட டெல்லி, அக்யூலா உணவகத்திற்கு எதிராகப் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை அக்யூலா உணவகத்தின் சார்பாக ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், `நாங்கள் இதுவரை பொறுமையாகதான் இருந்தோம். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு. எங்கள் உணவகத்தைப் பயன்படுத்த முன்பதிவு செய்வது என்பது கட்டாயம். ஆனால், சம்பந்தப்பட்ட பெண் முன்பதிவு எதுவும் செய்யவில்லை. அவரை காத்திருக்கச் சொன்னோம்.
ஆனால், அதற்குள் அவர் எங்கள் நிர்வாகத்தின் மீது கோபம் கொண்டு கூச்சலிட ஆரம்பித்தார். நிர்வாகத்தில் பணியாற்றிய நபர் ஒருவரையும் அடித்துள்ளார். பிரச்னையைத் தற்காலிகமாக முடிக்க எண்ணி, எங்கள் நிர்வாகத்தின் பணியாளர் ஒருவர், ஆடையை காரணம் காட்டி வெளியே போகுமாறு தெரிவித்துள்ளார்.
இது நிர்வாகத்தில் பணியாற்றும் தனிநபரின் கருத்து மட்டுமே, நிர்வாகத்தின் கருத்து கிடையாது. இதற்கு முன் புடவை அணிந்து வந்த எத்தனையோ பெண்களை நாங்கள் மரியாதையுடன் நடத்தியுள்ளோம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. மேலும் சம்பந்தப்பட்ட பெண் எங்களிடம் ஒரு மணிநேரம் விவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் இருக்கின்றன. ஆனால் பத்து நொடி காட்சிகளை மட்டுமே அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு மணி நேரம் வாக்குவாதம் நடந்ததற்கான ஆதாரத்தையும், அந்தப் பெண் எங்கள் பணியாளரை அடித்தற்கான ஆதாரங்களையும் நாங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்’ என்று புகைப்படங்களுடன் பதிவிட்டு இருந்தனர்.
Saree is not allowed in Aquila restaurant as Indian Saree is now not an smart outfit.What is the concrete definition of Smart outfit plz tell me @AmitShah @HardeepSPuri @CPDelhi @NCWIndia
Please define smart outfit so I will stop wearing saree @PMishra_Journo #lovesaree pic.twitter.com/c9nsXNJOAO— anita choudhary (@anitachoudhary) September 20, 2021