• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுக இளைஞரணி மாநாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட முன்வருவாரா..? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..,

திமுக இளைஞரணி மாநாட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 
திமுகவின் மக்கள் விரோத செயல்களை நாள்தோறும் எடப்பாடியார் தோல் உரித்து காட்டி வருகிறார். இன்றைக்கு தமிழகத்தில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை குழி தோண்டி புதைக்கும் தொலைநோக்கு பார்வையற்ற அரசாக தி.மு.க அரசு உள்ளது. இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய இளைய தலைமுறையின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடுமோ என்கிற  மிகப்பெரிய அச்சம் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. அதைத்தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் நாட்டின் முதுகெலும்பு வேளாண்மை, நாட்டின் உயிர் மூச்சு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் என்று அழகாக சொல்லி உள்ளார்.  
தமிழகம் முழுவதும் 9 லட்சத்திற்கு மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் சுமார் 2 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகிறார்கள். இந்த இரண்டரை ஆண்டுகால திமுக ஆட்சியில் பொருளாதாரம் மந்தநிலை, மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஆளுங்கட்சியின் அராஜகம், தற்போது இரண்டாம் முறையாக மின் கட்டண உயர்வு ,பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொறித்து அதன் மூலம் உபயோகிக்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் இதனால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
25.5.2023 அன்று ஒருநாள் போராட்டத்தில் சுமார் 9,500 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 2 கோடி தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை இழந்துள்ளதாகவும் தொழில் அமைப்புகள் கூறிவருகின்றன. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியில், 2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2026 ஆம் வரை 50 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தீவிர முயற்சி எடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி 185 இல் கூறப்பட்டுள்ளது. அதே போல் அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண்கள் 187,188,189 கூறப்பட்டுள்ளது.
தற்போது முதலமைச்சர் கடந்த இரண்டு ஆண்டு காலத்திலே 12 ஆயிரத்து 577 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கும், அடுத்த இரண்டு ஆண்டுகளிலே ஐம்பதாயிரம் பேருக்கு வழங்கப்படும் என்று 10,205 பேருக்கு அரசாணை வழங்கிய நிகழ்ச்சியில் பேசினார்.  ஆனால் தேர்தல் வாக்குறுதலில் ஐந்தாண்டுகளில் 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியை ஒப்பிட்டு பார்க்கும்போது இது தோல்வி அடைந்து இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வீதம்  ஐந்து ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. எடப்பாடியார் இளைஞர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்றைக்கு கட்சியில் கூட இளைஞர்களுக்கும், மகளிர்க்கும் அதிகமான முக்கியத்துவத்தை அளித்து ஜனநாயக காவலராக எடப்பாடியார் உள்ளார். 
இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி மாநாட்டை நடத்த போகிறோம் என்று சொல்லி ஒரு அறிவிப்பைகொடுத்துள்ளார்கள். இந்த மாநாட்டில் இளைஞர்களுக்கு எதிர்காலத்திற்கு  வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதத்திற்கு கூறப்போகிறார்கள். இளைஞர்களுக்கு கேள்விக்குறியாக இருக்கும் வேலைவாய்ப்பில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம், வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு அதில் இடம்பெறுமா? அறிவிப்பு அளிக்க உதயநிதி ஸ்டாலின் முன் வருவாரா? என கூறினார்.