

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு, திங்கள் கிழமை (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட்டன. சென்னை விருகம்பாக்கம் மகளிர் பள்ளியில், மாணவிகளை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புதிய கல்வியாண்டு தொடங்கும் முன் மாநிலத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில், 1.31 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
பொதுவாக, அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகுதான் மாணவர் சேர்க்கை தொடங்கும். இந்த ஆண்டு, 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பிரசாரத்தை பள்ளிக் கல்வித்துறை கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கியது.
கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 4.5 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஜூன் மாத இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். மற்ற வகுப்புகளிலும் அதிக மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சேர்க்கை ஆகஸ்ட் வரை நடைபெறும். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 46 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களைப் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் பஸ் பாஸ் வழங்கப்படும், சீருடையுடன் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம், என்றார்.
மேலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அமைச்சர் கூறுகையில், மாநில கல்வி கொள்கை குறித்து குழு அறிக்கை சமர்ப்பித்த பின்னர் மாநில அரசு முடிவெடுக்கும். தற்போது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு, போட்டி தேர்வு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.