• Mon. Apr 29th, 2024

ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஏன் வாக்களிக்கவில்லை : இந்தியா விளக்கம்..!

Byவிஷா

Oct 28, 2023

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏன் வாக்களிக்கவில்லை என இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 21வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. காஸா பகுதியில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இந்த தாக்குதலை இஸ்ரேல் ஒத்திவைத்துள்ளது.
இருப்பினும் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. முன்னதாக நடைபெற்ற தாக்குதல்களில், காஸா பகுதியில் 7000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 2,900 பேர் குழந்தைகள் என்றும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 15,000 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது. இதில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் தொடர்பான விவாதங்கள் எழுந்தன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ரஷ்யாவும் தீர்மானங்களை முன்வைத்தன. இதில் அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யா, சீனா இணைந்து வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்தது. அதேநேரம் ரஷ்யாவின் தீர்மானம் போதுமான வாக்குகளை பெறாமல் தோல்வியை தழுவியது.
இதையடுத்து மனிதாபிமான போர்நிறுத்தம் கோரி ஜோர்டன் வரைவு தீர்மானத்தை கொண்டு வந்தது. ஐநா பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த வரைவு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 120 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஈராக், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போலந்து, தென் கொரியா, சுவீடன், துனிசியா, உக்ரைன், பிரிட்டன் உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை.
ஹமாஸ் அமைப்பு பற்றிய குறிப்புகள் இடம்பெறாததாலும், ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு கண்டணம் தெரிவிப்பது தொடர்பான குறிப்புகள் இல்லை என்பதாலும் வாக்களிக்கவில்லை என்று விளக்கமளித்த இந்தியா, ஹமாஸ் அமைப்புக்கு கண்டணம் தெரிவிக்கும் வகையில் ஒரு பத்தியை இணைத்து வரைவு தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கனடாவின் முன்மொழிவை ஆதரித்தது.
பின்னர் தீர்மானத்தின் மீது பேசிய இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல், “அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த தாக்குதல்கள் அதிர்ச்சியளிக்கிறது. அது கண்டனத்திற்கு உரியது. பணயக்கைதிகள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம். அவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயங்கரவாதம் மிகவும் கொடூரமானது. அதற்கு எல்லையோ, தேசியமோ, இனமோ தெரியாது. பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்திப் பேசுவதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபடுவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான அணுகுமுறையைக் கடைப்பிடிப்போம். காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவும் இதில் பங்களித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா எப்போதும் ஆதரவு தெரிவித்துள்ளது. வன்முறையைத் தவிர்க்கவும், நேரடியான சமாதானப் பேச்சுவார்த்தைகளை விரைவாக தொடங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த பேரவையில் எழும் விவாதங்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான நமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *