• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ரஜினியை அடுத்ததாக இயக்கப்போவது யார்!

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங்கு ராஜா முதல் வெற்றிமாறன் வரை என ஒரு பெரிய லிஸ்ட்டே ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

‘அண்ணாத்த’ படம் கடந்த தீபாவளிக்கு வெளியான நிலையில், டிசம்பர் மாதமே அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டது! ஆனால், தற்போது வரை இயக்குநர்கள் பெயர்கள் மட்டுமே வரும் நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது யார் என்று இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை!

கடந்த தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதற்காக அந்த படத்தை இயக்கிய இயக்குநர் சிவா மற்றும் அந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்க செயின் பரிசாக வழங்கினார்.

துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குநர் தேசிங் பெரியசாமி ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குவார் என ஆரம்பத்தில் பேசப்பட்டது. அவரும் ஒரு கதையை சன் பிக்சர்ஸ்க்கு சொல்ல அந்த படத்தின் பட்ஜெட் ஒத்துவராததால் அந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

டாக்டர், பீஸ்ட் என பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இளம் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை வைத்து சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வந்தன. ஆனால், தற்போது நெல்சனை தவிர்த்து வேறு பல பெயர்களும் அடிபட்டு வருகின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை, எதற்கும் துணிந்தவன் படங்களை இயக்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் தகவல்கள் பரவின. ஆனால், அப்படியொரு பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகிறார் என்றும் ரூமர்கள் கிளம்பின.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தேசிங்கு ராஜா, நெல்சன், பாண்டிராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் என ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது இளையராஜா மற்றும் கலைப்புலி எஸ். தாணு இணைந்து தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக புதிய தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த படத்தை தனுஷின் ஷமிதாப் படத்தை இயக்கிய பால்கி இயக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிலும் மாற்றம் வந்துள்ளது.

இயக்குநர் பால்கி இயக்குவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பால்கி இல்லையாம் வெற்றிமாறன் அந்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் எதிரொலித்து வருகின்றன. சூர்யாவின் வாடிவாசல் படம் தாமதமாகும் சூழலில் ரஜினியை வைத்து ஒரு படத்தை குறைவான நாட்களில் எடுத்து முடிக்கப் போகிறார் என்றும் சொல்கின்றனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காதா? என இயக்குநர்கள் முண்டியடித்து கொண்டிருக்கும் நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த பட வாய்ப்பு எந்த இயக்குநருக்கு செல்லப் போகிறது என்பது தான் கோலிவுட்டின் உச்சபட்ச டாக்காக மாறியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இப்படி எத்தனை இயக்குநர்கள் பெயர் அடிபடும் என்று தெரியவில்லை.