• Wed. Apr 24th, 2024

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது?

வரும் ஜன.,19ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருப்பதால், வரும் 21ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில், 2016ல் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
முதலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுக்காக தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, சில மாதங்கள் தேர்தல் தள்ளிப் போனது. அதன்பின், வெவ்வேறு காரணங்களைக் காட்டி, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதனால், மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சிகளுக்குக் கிடைக்க வேண்டிய நிதியும் தடைபட்டது.கடந்த 2019 டிசம்பரில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும் நடத்தப்பட்டது. அதிலும் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, அக்டோபரில் தேர்தல் நடந்தது.

ஆனால், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. நான்கு மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்று, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஜனவரி இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதுதொடர்பாக, வரும் 27ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் பதில் தர வேண்டிய கட்டாயம் உள்ளது.இதற்கிடையில், சென்னை மாநகராட்சியில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட், அந்த அரசாணையை ரத்து செய்து, 100 வார்டுகளை மட்டும் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.இந்த வழக்கு உட்பட வேறு எந்த சட்டரீதியான தடைகளும் இல்லாத நிலையில், மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது.

வரும் 19ம் தேதி, அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் முடிந்தபின், வரும் 27ம் தேதிக்குள் எந்த நாளிலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது.மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘வரும் 27ம் தேதிக்குள் தேர்தலை நடத்த இயலாவிட்டாலும், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு விட்டால், அதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொள்ளும். இல்லாவிடில், மாநில தேர்தல் ஆணையம் கடும் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கும். பிப்., மூன்றாம் வாரத்துக்குள் தேர்தலை நடத்தும் வகையில், 21ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *