• Fri. Nov 8th, 2024

யாருக்கு எத்தனை சதவிகித வாக்குகள்? 5 மாநில தேர்தல் முடிவுகள் அலசல்

5 மாநில தேர்தல் முடிவுகளில் உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிகப்ட்சமாக 41.6 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ள பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அந்த மாநிலத்தில் ஒரே கட்சி தொடா்ந்து 2-ஆவது முறையாகத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் சமாஜவாதி கட்சி 32 சதவிகித வாக்குகளுடன் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோதல் முடிவுகள் வெளியான நிலையில், 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது.
ஐந்து மாநில தோதலில் பாஜகவின் வாக்கு சதவீதம் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூா், கோவாவில் அதிகரித்தும், உத்தரகண்டில் குறைந்தும் உள்ளது.
ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் பாஜக தனது 2017 வாக்கு சதவிகித்தை தக்க வைத்துக் கொண்டதுடன், ஓரளவுக்கு வாக்கு சதவிகிதத்தை அதிகரித்துள்ளது. உத்தரகண்ட் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. விதிவிலக்காக, உத்தரகண்ட் மாநிலத்தைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் காங்கிரஸ் அதன் வாக்குகளை பெருமளவில் இழந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி சார்பில் போட்டியிட்ட முக்கிய பிரமுகர்களின் மூலம் அதன் வாக்கு சதவிகிதம் 10 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. பஞ்சாபில் ஆட்சியமைக்க உள்ள ஆம் ஆத்மி அதன் வாக்கு சதவிகிதத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 2017 தேர்தலில் 39.7 சதவிகித வாக்குகள் பெற்ற பாஜக, இந்த முறை இரண்டு சதவிகிதம் அதிகம் பெற்று 41.6 சதவிகித வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. சமாஜவாதியின் வாக்குகள் சதவிகிதம் 21.8 சதவிகிதத்தில் இருந்து 32 சதவிகிதமாக உயர்ந்தும் கூட வாக்கு வித்தியாசம் பெரியளவிலே உள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு தோதலுடன் ஒப்பிடுகையில் சமாஜவாதி கட்சி கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும், அவை ஆட்சியமைப்பதற்குப் போதுமானதாக இல்லை. தற்போது பலம் வாய்ந்த எதிா்க்கட்சியாக பேரவையில் சமாஜவாதி திகழ உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி 22.2 சதவிகிதத்த்தில் இருந்து 12.7 சதவிகிதமாகவும், காங்கிரஸ் 6.3 சதவிகிதத்த்தில் இருந்து வெறும் 2.4 சதவிகிதம் பெற்றுள்ளது, ராஷ்ட்ரிய லோக்தள் 3 சதவிகித வாக்குகளைவிட குறைவாக பெற்றுள்ளது.
பஞ்சாப்: பஞ்சாபில், 2017 தேர்தலில் 23.7 சதவிகித வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மியின் வாக்குகள் தற்போது 42 சதவிகிதமாக உயர்ந்தது, இது மாநிலத்தில் அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக உள்ளது. காங்கிரஸ் வாக்குகள் சதவிகிதம் 38.5 சதவிகிதத்தில் இருந்து 23 சதவிகிதமாக குறைந்துள்ளது, அகாலி தளம் 25.2 சதவிகிதத்தில் இருந்து 18.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. பாஜக 5.5 சதவிகித வாக்குகளில் இருந்து 6.60 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. சிரோமணி 25.2 சதவிகித வாக்குகளில் இருந்து 18.38 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது.
உத்தரகண்ட்: உத்தரகண்டில், காங்கிரஸ் வாக்கு சதவிகிதம் 33.5 சதவிகிதத்தில் இருந்து 37.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது, ஆனால் 2017 இல் 46.5 சதவிகிதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவிகிதம் 44.3 சதவிகிதமாக குறைந்துள்ளது. இருப்பினும் உத்தரகண்டில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 32 தொகுதிகளில் தனிப் பெரும்பான்மையுடன் அக்கட்சி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் வென்று மீண்டும் எதிா்க்கட்சியாகவுள்ளது.

கோவா: கோவாவில், 2017 தேர்தலில் 32.5 சதவிகித வாக்குகள் பெற்ற பாஜக, தற்போது தனது வாக்கு சதவிகிதத்தை 33.3 சதவிகிதமாக உயர்த்தியதுடன் கோவாவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்தில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு ஓா் இடம் மட்டுமே தேவைப்படும் நிலையில், ஆட்சியமைப்பதற்காக சுயேச்சைகளிடம் ஆதரவைப் பெற முயற்சித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் வாக்கு சதவிகிதம் 28.4 சதவிகிதத்தில் இருந்து 23.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. 11 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ள காங்கிரஸ் மீண்டும் எதிா்க்கட்சியாகவுள்ளது.

மணிப்பூர்: மணிப்பூரில், 2017 தேர்தலில் 36.3 சதவிகித வாக்குகள் பெற்ற பாஜக, தற்போது 37.7 சதவிகித வாக்குகள் பெற்று தனது வாக்கு சதவிகித்தை உயர்ந்துள்ள நிலையில், மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வென்றுள்ள பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வாக்கு சதவிகிதம் 35.1 சதவிகிதத்தில் இருந்து 16.6 சதவிகிதமாக சரிந்துள்ளது, தேசிய மக்கள்கட்சி வாக்கு சதவிகிதம் 5.1 சதவிகிதத்தில் இருந்து 16.48 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *