• Tue. May 30th, 2023

மதில் மேல் பூனை என்ன செய்ய காத்திருக்கிறார் எடப்பாடி ?

உலக அரசியல் பேசிக்கொண்டிருந்த நிலையில் தற்போது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு செய்தி பேசப்பட்டு வருகிறது. அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்த பேச்சு மறுபடியும் எழுந்துள்ளது. வழக்கம் போல் இந்த பிரச்சனையை எழுப்பியிருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். காலம் கனிந்த போது காத்திருந்து தனக்கான வாய்ப்பை உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறார்.
நேற்றைய தினம் தேனியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.நீண்ட நேரம் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறவில்லை அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தான் கூறியுள்ளார்.
இந்த நிகழ்விற்கு பின்புலமாக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம் அல்ல அவரது சகோதரர் ஓ.பி.ராஜா.ஆம் அண்ணன் அமைதியாக இருக்கும் நேரம் எல்லாம் சசிகலா குறித்து பேசி தொண்டர்களின் ஆதரவுகளை திரட்டுவது. தற்போது கூட இந்த ஏற்பாடுகள் அனைத்திற்கும் ஓ.பி.ராஜா தான். தேனி மாவட்டம் மூலதனமாக வைத்து கொண்டு விருதுநகரிலும் இது போல தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம் என்றும் கூறியிருக்கிறார். சசிகலாவை சந்திக்கும் திட்டத்தை தீட்டி திருச்செந்தூரில் நேரில் சந்தித்து இதுகுறித்து ஓபி ராஜா பேச உள்ளார்
நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து இன்னும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து எந்த வித எதிரொலியும் வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் அமைதிக்கு காரணம் என்ன என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது. சசிகலா பக்கம் சென்று விடலாமா, இதே போன்று கெத்து காட்டிவிடலாமா என்று மிகப்பெரிய யோசனையில் உள்ளார்.
தற்போது அனைத்து தரப்பில் இருந்தும் எடப்பபாடிக்கு எதிராக தான் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. முதல் காரணம் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி செய்தது. இந்த குளறுபடி தான் கட்சி தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. திமுக தலைமைக்கும இது சாதகமாக அமைந்தது. அடுத்து கட்சி நிர்வாகிகளுக்குள் அதிருப்தியை சந்தித்தது. அன்வர் ராஜா நீக்கம் எல்லாம் எடப்பாடி மேல் பெரும் அதிருப்தி வர காரணம்.
இவை எல்லாம் சாதரணமாக கூறலாம் ஆனால் உண்மையான ஆட்டம் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி , இரண்டு விஜயபாஸ்கர்கள் ஆகியோர் மீதெல்லாம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற போது எடப்பாடி அமைதியாக இருந்தது. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது கூட கட்சி சார்பில் வேண்டா வெறுப்பாக தான் கட்சி தலைமை சேர்ந்தவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கட்சி சார்பில் இருந்தும் பெரிய அளவில் ,பணம் கைமாற வில்லை. செய்தவரைக்கும் செலவுகள் போதும் என்று மணி சகோதரர்கள் எடப்பாடியை கை நழுவி விட்டனர்.

எடப்பாடியின் மிக நெருக்கமான தங்கமணி கூட எடப்பாடியை சந்தித்து நான்கு ஐந்து மாதங்கள் ஆகிறதாம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு கூட எடப்பாடி யாரையும் சந்திக்க விருப்பம் இல்லாமல் தனிமையை விரும்பி சேலம் வீட்டில் இருந்து வருகிறார். கிட்ட தட்ட அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். இது நமக்கு ஆபத்தாக போய் விடுமா என்ற பயத்திலும் உள்ளார்.
சரி இதில் ஓபிஎஸ், இபிஎஸ் நிலைப்பாடு குறித்து மட்டும் பேசப்படுகிறது. சசிகலா குறித்து நாம் யோசித்து பார்க்கவில்லை. ஏதோ ஒரு மனநிலையில் இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் ஆர் பி உதயகுமார் , செல்லூர் ராஜூ ,ஓபிஎஸ் தனிரகம், ஆனால் ஜெயக்குமார் , சிவி சண்முகம் , எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் பேசி பேச்சுக்கள் கொஞ்சமா நஞ்சமா.
இதற்கு எதிர்வினையாற்றாமல் மன்னித்து விட கூடிய அளவிற்கு சசிகலா பெரிய மனம் படைத்தவரா?. ஏனென்றால் கூழை கும்பிடு போட்டது போதும் என்று நினைத்து தான் இவர்கள் தனியாக சென்று சசிகலாவை ஒதுக்கினர்.ஆனால் தற்போது மீண்டும் அந்த காட்சியை நிறைவேற்ற எடப்பாடி தரப்பினர் விரும்பவில்லை. இவர்கள் சசிகலா பக்கம் சென்றால் இவர்களின் நிலை என்ன என்பதை எடப்பாடி யோசிக்காமல் இருக்கமாட்டார்.
ஆனால் இந்த செயல்கள் எதுவும் ஓபிஎஸ்சை பாதிக்காது.காரணம் அவர் யார் தலைமைக்கும் கீழ் வேலை செய்து பழகியவர்.இதனை ஓபிராஜா கூட உறுதி செய்துள்ளார். ஆனால் எடப்பாடிக்கு அவ்வப்போது பயம்புறுத்தும் ஓபிஎஸ் இந்த முறையும் செய்துள்ளார். ஆனால் இந்த முறை என்ன காரணம் என்று தெரியவில்லை.
தேனி மாவட்ட அதிமுகவினர் இந்த அதிரடி நடவடிக்கையில் ஓ.பன்னீர் செல்வம் பட்டும் படாமலும் தான் இருக்கிறார். தனது வழக்கமான வேலையாக ஊர் குளத்தின் ஆழம் பார்க்க ஊரான் பிள்ளைய இறக்கி விட்டு வேடிக்கை பார்ப்பது போல இந்த விஷயத்தில் தேனி மாவட்ட நிர்வாகிகளை பலி கிடாவாக்கியுள்ளார். பெருமளவு பூகம்பத்தை கிளப்ப முடியவில்லை என்றால் ஓபிஎஸ்ஸால் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முடியும். இதனாலே எடப்பாடி ஓ.பன்னீர்செல்வத்தை அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
பாஜகவிடம் அதிமுக முழுவதுமாக சரணடைந்து விடும் என்று கட்சி தொண்டர்கள் பயப்படுகின்றனர். ஓபிஎஸ், சசிகலாவிடம் கட்சி சென்றால் ஓபிஎஸ் பாஜகவிடம் தான் அடைக்கலம் தேடுவார். சசிகலாவும் முன் போல் செயல்பட முடியாமல் பாஜகவின் நேரடி பார்வையில் தான் உள்ளார். இதற்கு கொடநாடு வழக்கு ஸ்மார்ட் சிட்டி ஊழல் , என்று பழைய கோப்புகளை திமுக தூசி தட்டுகிறது இதற்கு நடுவில் எடப்படியார் மதில் மேல் பூனையாக இந்த பக்கமும் அந்த பக்கமும் சாய முடியாமல் திணறி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *