• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேச அதிமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? – முதல்வர் கேள்வி

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பற்றி பேச அதிமுகவுக்கு தகுதியில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார். இதில் தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த விளக்கமும் மேலும் பல புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர், ‘திமுக ஆட்சிக்கு வந்தபிறகே ரவுடிகளை ஒடுக்கி, கூலிப்படைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாநிலத்தில் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.


திமுகவை சார்ந்தவர்களே தவறு செய்தாலும், ஏன் சிறிய குற்றம் இழைத்தாலும் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அண்ணா, கலைஞர் மீது ஆணையாகச் சொல்கிறேன். தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சி அந்த வழக்கு பாயுமோ இந்த வழக்கு பாயுமோ என்று பயந்து நடுங்குகிறவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு தர முடியாது.


பதுங்கும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், இந்த அரசு பாய்ந்து பிடிக்கும். அப்படி பதுங்கிய ஒருவரும் கடந்த 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டுவிட்டார்.


காவல்துறையை ஏவல்துறையாக மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சத் தலைவர் கூறினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சி வாயிலாக தெரிந்துகொண்டதாக கூறியது யார்?
கொடநாடு கொலை முதல் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, குட்கா வழக்கு வரை முத்திரையை பதித்தவர்கள் அதிமுகவினர்தான். சட்டம் ஒழுங்கு பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.