கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்ற இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில், கரூர், மண்மங்கலம், புகளூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர் ஆகிய 7 வட்டங்களை சார்ந்த, பொதுமக்கள் தங்களின் குறைகளையும், அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை, தார்சாலை, தெருவிளக்கு, இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் கேட்டு மனுக்கள் கொடுத்த நிலையில், கரூர் மாவட்ட அதிமுக இளைஞரணி மாவட்ட இணை செயலாளரும், அதிமுக வழக்கறிஞருமான கரிகாலன் ஒரு மனுவை மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவிடம் கொடுத்தார்.

இந்த மனுவில், தார்சாலையை ஆக்கிரமித்ததோடு, தார்சாலையிலேயே வீடும் கட்டி வரும் திமுக நிர்வாகி குறித்தும், அதுவும் திமுக கவுன்சிலரின் கணவர் என்கின்ற அதிகாரத்தில், பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்கள் அரசு அதிகாரிகளை மிரட்டி செய்து வருவதாக ஆதரப்பூர்வமாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தும் பேசினார். அப்போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகளூர் தாலுகா, புகளூர் நகராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் சபீனா என்பவரது கணவர் நவாஸ்கான் என்பவர் கம்பி வேலி அமைத்து அதில் ஒரு அஸ்பெஸ்ட்டாஸ் கட்டிடத்தினை எழுப்பியும் உள்ளார்.
தார்சாலை திரும்பும் இடத்தில், பொதுக்கழிப்பிடம் செல்லும் வழியினையும் ஆக்கிரமித்து இவர் கட்டி வரும் இந்த கட்டிடத்தினால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்கள் வாழமுடியும் என்று முன்னாள் அரசு வழக்கறிஞரும், அதிமுக கரூர் மாவட்ட இளைஞரணி இணை செயலாளருமான கரிகாலன் கிளப்பிய பகீர் தகவலால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமல்லாமல், திமுக கட்சி நிர்வாகமே அதிர்ச்சியில் உள்ளது.
காரணம், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர் மக்கள் பிரதிநிதியின் கணவரும், திமுக நிர்வாகியும் என்பதினால் தான், அதுமட்டுமில்லாமல், மக்களே இனியாவது வாக்குகள் அளிக்கும் போது தெளிவாக வாக்களியுங்கள் என்று அங்கேயே தேர்தல் பிரச்சாரத்தினை தொடக்கியது போலவும், திமுக கட்சி நிர்வாகியின் ஆக்கிரமிப்பினை தோல் உரித்து காட்டிய இவரது செயல் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பினை ஏற்படுத்தியது.