

நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள பாமகவினர் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு, பாமக சார்பில் மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில் மாலை அணிவித்து, வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெய்வேலியில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த என்.எல்.சி. போராட்டத்தில் பாமகவினர் 55 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், மதுரை மத்திய சிறையில் 17 பேர் நீதி மன்ற காவலில் இருந்து வந்தனர் .
இன்று ஜாமினில் அவர்கள் வெளிவந்தனர். அவர்களுக்கு, பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா, அருள் எம்.எல்.ஏ, தலைமையில் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்சியில், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் நடராஜன், பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் சண்முகநாதன், தென் மண்டல செயலாளர் சத்திரிய சேகர், பாமக அமைப்பு செயலாளர் முருகானந்தம், மாவட்ட செயலாளர்கள் ராஜா, அழகர்சாமி, மற்றும் கிட்டு உட்பட மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
