• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

திரும்பி பார்ப்போம் என்றும் இளமை மாறாத இயக்குநர் – ஸ்ரீதர்.

Byமகா

Oct 24, 2022

மதுராந்தகத்தில் 1933ல் பிறந்து தன் முயற்சியில் பின்னாளில் கல்லூரி
மாணவிகளின் கனவு நாயகனாகத் திகழ்ந்தவர்தான் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர். ஒரு இயக்குநருக்கு இந்த அளவு புகழ் கிடைக்குமா என்றால்…. அவருக்குக் கிடைத்ததே. அதற்குப் பின்னரே தமிழ்ப் படங்களின் இயக்குநர் கூர்ந்து கவனிக்கப் பட்டார்கள்.இந்த நடிகர் படம்.. அந்த நடிகர் படம் என பேசும் காலம் மறைந்து.. இது அந்த இயக்குநர் படம்..இந்த இயக்குநர் படம் என பேசப்பட்டது.
சினிமா தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கிய காலத்திலெல்லாம்
தயாரிப்பு நிறுவனங்கள்தான் புகழ்பெற்றிருந்தன. இதையடுத்து, நடிகர்களைக் கொண்டாடத்தொடங்கினார்கள். எம்ஜிஆர், சிவாஜிகளின் காலத்திலும் அப்படித்தான் இருந்தது. என்னதான், எல்லீஸ் ஆர்.டங்கன், எல்.வி.பிரசாத், பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, பந்துலு, ஏ.பி.நாகராஜனெல்லாம் இருந்தாலும் நடிகர்களின் பெயரோ தயாரிப்பு நிறுவனங்களின் பெயரோ சொல்லித்தான் படம் பார்க்கக் கூட்டம் வந்தது.
முதன்முதலாக ஓர் இயக்குநரின் பெயருக்குத் தனி மதிப்பு உருவானது. அவரின் நவீன
முயற்சிகளைக் கண்டு வியந்தனர் தமிழ் திரை ரசிகர்கள். மெல்லிய உணர்வுகளைக் கொண்ட கதாபாத்திரங்களை வடிவமைத்து, நம் மனங்களைக் கொள்ளையடித்த அந்த இயக்குநர் – ஸ்ரீதர்.

‘இது ஸ்ரீதர் படம்’ எனும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் முத்திரை குத்தி, குதூகலப்பட்டது தமிழ்த் திரையுலகம்.
தமிழ்த் திரைப்பட உலகில் மிகவும் பேசப்பட்ட முதல் வசனகர்த்தா இளங்கோவன்.
செங்கல்பட்டுக்காரர். ஸ்ரீதரும் செங்கல்பட்டு அருகே சித்தாமூரைச் சேர்ந்தவர். பள்ளியில் அரங்கேற்றிய நாடகங்கள்ரூபவ் உள்ளுரில் பேர் வாங்கிக் கொடுத்தன. அரை நிஜார் பாக்கெட்டில் கனவுகளையும் கற்பனைகளையும் கதைகளையும் சேகரித்தார் ஸ்ரீதர். இளங்கோவனைச் சந்தித்து தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
அதன் பின்னர் ஸ்ரீதர் சந்தித்ததெல்லாம் அவமான அத்தியாயங்கள். அப்போது ஸ்ரீதர்
மிகவும் இளையவர். ‘இவ்ளோ சின்னப் பையனா இருக்கியேப்பா’ என்று சொல்லிச் சொல்லியே ஒதுக்கினார்கள். அவரோ தன் நிலையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல அசராமல் முயன்றுகொண்டே இருந்தார்.
கமல்ஹாசனின் ஆரம்ப கால குரு என்று போற்றப்படும் டி.கே.சண்முகம்
அண்ணாச்சியிடம் சென்று தன் கதையை வாசிக்கக் கொடுத்தார் ஸ்ரீதர். அதைப் படித்துவிட்டு ஸ்ரீதரை ஏற இறங்கப் பார்த்தார் அண்ணாச்சி. வாடிய முகத்துடனும் கலக்கத்துடனும் அவரையே பார்த்தார் ஸ்ரீதர்.
’’இதோட ஒரிஜினல் எங்கே இருக்கு தம்பி?’’ என்று அவர் கேட்க, ‘’சித்தாமூரில் உள்ள
வீட்டில் இருக்கு சார்’’ என்று ஸ்ரீதர் சொன்னார். ’’உடனே போய் அதை எடுத்துட்டு வாங்களேன்” என்றார் அண்ணாச்சி. வேறொன்றுமில்லை… ‘இந்தப் பையன்தான் எழுதினானா? அல்லது மண்டபத்தில் வேறு யாராவது எழுதிக் கொடுத்து, அதை எடுத்து வந்திருக்கிறானா?’ என்று அண்ணாச்சிக்கு சந்தேகம்.
மறுநாள்… தான் எழுதிவைத்த நோட்டுப் புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்தார் ஸ்ரீதர். அப்போதும் சண்முகம் அண்ணாச்சியின் சந்தேகம் தீரவில்லை. ஸ்ரீதரை சோதிக்க நினைத்தார். “இதுல இந்த சீன் மட்டும் கொஞ்சம் மாத்தி வேற விதமா எழுதிக்கொடுக்க முடியுமா? மாடிக்குப் போய் உக்காந்து எழுதுங்க’’ என்றார். அடுத்த ஒருமணி நேரத்தில் எழுதிக்கொண்டு வந்தார்.
அசந்துபோன அண்ணாச்சி, ஸ்ரீதரின் ‘ரத்தபாசம்’ நாடகத்தை அரங்கேற்றினார். நாடகம் முடிந்ததும், ‘’இந்தக் கதையை எழுதியது சின்னப் பையன். அவனை அறிமுகப்படுத்துகிறேன்’’ என்று ஸ்ரீதரை மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து படங்களுக்கு வசனம் எழுதுகிற வாய்ப்பு ஸ்ரீதருக்குக் கிடைத்தது. சிவாஜி நடித்த ’எதிர்பாராதது’ரூபவ் ‘யார் பையன்’, உத்தமபுத்திரன்’, ’அமரதீபம்’ என்று வரிசையாகப் படங்கள் கிடைத்தன. ‘ப்ராணநாதா’, ‘தேவி’ ’ஐயனே’ என்று பேசப்பட்டு வந்த வசன பாணியை முழுவதுமாக மாற்றினார் ஸ்ரீதர். நாமெல்லோரும் பேசிக் கொள்ளும் படியான பேச்சுவழக்கு ஸ்டைலில் அன்றாட வாழ்வில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளையெல்லாம் போட்டு வசனம் எழுதினார். நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர், வீனஸ் பிக்சர்ஸில் பார்டனராகச் சேர்ந்தார்.
அதற்குப் பிறகு, முதன்முதலாகப் படத்தை இயக்கினார். ஜி.ராமநாதன் முதலான பெரிய இசையமைப்பாளர்களை அழைக்கவில்லை. படத்தின் நாயகனாக ஜெமினி கணேசனைத் தேர்ந்தெடுத்தார்.
ஏ.எம்.ராஜா இசையமைத்தார். அதுவரை பாடகர் என்று அறியப்பட்டிருந்த ஏ.எம்.ராஜாவை இசையமைப்பாளராக்கியது ஸ்ரீதர்தான்! காலத்துக்கும் மனதில் நிற்கும் பரிசாக, காதல் பரிசாக, ‘கல்யாண பரிசு’ படத்தைக் கொடுத்தார்.

கல்யாண பரிசு’ படத்தில் காதலில் தோல்வியுற்ற சரோஜாதேவி கேரக்டரின் பெயர்
வசந்தி. ஆகரூபவ் ‘வசந்தி’யை காதலின் சின்னமாகவும் அடையாளமாகவும் பார்த்தார்கள் ரசிகர்கள்.
எந்தப் பெயர் கொண்ட பெண்ணைக் காதலித்து ஆண் தோற்றிருந்தாலோ ஆணைக் காதலித்து பெண் தோற்றிருந்து வேறொருவரை கல்யாணம் செய்துகொண்டாலோ… அவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு ‘வசந்தி’ என்று பெயர் சூட்டி, காதலைப் போற்றினார்கள். காதலின் நினைவாக்கிக்கொண்டார்கள். ஐம்பதுகளின் இறுதியில் தொடங்கி அறுபதுகளின் பிற்பகுதியிலும் கூட, ஏராளமான ‘வசந்திகள்’ பிறந்தார்கள்.
’மீண்ட சொர்க்கம்’, ‘விடிவெள்ளி’, ’தேன் நிலவு’, ’சுமைதாங்கி’ என்றெல்லாம்
தொடர்ந்து ஸ்ரீதர் இயக்கிய படங்கள், காதல் உணர்வின் உச்சபட்சங்கள். அந்த உச்சத்திலும் உச்சமாக நமக்குப் படைத்துக் கொடுத்ததுதான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.
இன்றைக்கு ஒரேயொரு நடிகர் நடிகர் நடிக்கும் படம், ஒரேயொரு ஷாட்டில் எடுத்த
படமெல்லாம் வந்துவிட்டன. ஒரே களத்தில் படமாக்குவதெல்லாம் அப்போது நினைத்துக் கூடப் பார்க்காத விஷயம். ஆஸ்பத்திரியில் மட்டுமே நடக்கிற கதையை எடுத்தார் ஸ்ரீதர். அது தமிழ் சினிமாவுக்கு ஸ்ரீதர் பாய்ச்சிய புதிய ரத்தம் என்று கொண்டாடினர்கள் திரையுலகினர்.
கல்யாண்குமார், தேவிகா, முத்துராமன், நாகேஷ், மனோரமா, வி.எஸ்.ராகவன், குட்டி
பத்மினி என ஆறேழு பேரை வைத்துக்கொண்டு, காதல், தியாகம், கடமை என்று உணர்வு பூர்வமாக அவர் வழங்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தைப் பார்த்து, இன்றைக்கும் வியந்து நெகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அடுத்து, முன்ஜென்ம விஷயத்தை கையில் எடுத்து ஸ்ரீதர் தன் திரைக்கதையாலும் காதலின் ஆழத்தாலும் சொன்னதுதான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. முன்ஜென்மத்தில் சேர முடியாத காதலர்கள், அடுத்த பிறவியில் சேருவதாக கதை சொல்லியிருந்தார். காதல்ரூபவ் திகில், நகைச்சுவை என அனைத்தையும் கனக்கச்சிதமாகச் சேர்த்து அவர் உருவாக்கிய அந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஸ்ரீதர் இயக்கிய ‘போலீஸ்காரன் மகள்’ரூபவ் ‘சுமைதாங்கி’ என எல்லாமே ஒவ்வொரு விதம். ’சித்ராலயா’ எனும் கம்பெனியைத் தொடங்கி, சொந்தப் படங்களாகவே எடுத்து இயக்கினார். ஸ்ரீதர் படமென்றால் இன்னொன்றும் கவனிக்கப்பட்டது. அதுவரை, கேமரா ஆணி அடித்தது போல்தான் நிற்கும். படத்துக்கு ஐந்தாறு காட்சிகள் கேமரா நகரும்படி
படமாக்கப் பட்டிருந்தாலே அதிசயம். அப்படியே படம் முழுக்க நகர்ந்தாலும், கதைக்கும்
கதாபாத்திரத்துக்கும் பேசுகிற வசனத்துக்கும் கேமரா நகர்வுக்கும் பிணைப்போ பந்தமோ பெரிதாக இருக்காது. அதையெல்லாம் உடைத்தெறிந்து காட்சி மொழியில் தனித்துவம் காட்டினார். ஆஸ்பத்திரி படுக்கையில் இருக்கும் முத்துராமன். அதற்கு அருகில் தேவிகா. நாலரை நிமிஷப் பாட்டு. ‘சொன்னது நீதானா?’ பாட்டு. முடியும் வரை இவர்கள் இருவரையும் காட்டவேண்டும்.
காட்சியின் கனத்தை பாடல் வழியேயும் கேமரா வழியேயும் ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டைக்கொண்டு உணர்த்திக் கொண்டே வருவார். முத்துராமனிலிருந்து தேவிகா, தேவிகாவில் இருந்து முத்துராமன். ஜன்னலில் இருந்து தேவிகா. ஜன்னலில் இருந்து முத்துராமன். ஜன்னலில் இருந்து இருவரும். கட்டிலில் முத்துராமன். அதன் கீழே கேமரா பார்வை பார்க்கும். அப்படியே தேவிகாவுக்கு முன்னே நகரும். பின்னர், இருவரையும் மேலிருந்து காட்டும். தேவிகாவையும் அங்கே இருக்கும் கண்ணாடியில் முத்துராமன் முகத்தையும் காட்டும். அந்த ‘சொன்னது நீதானா’
பாடலை இப்போது பார்த்தாலும் மிரண்டு வியக்காதவர்களே இல்லை.
இதனிடையே இந்திப் படங்களையும் தயாரித்து இயக்கினார். அங்கேயும் ஸ்ரீதரைக்
கொண்டாடினார்கள். காமெடியாக, ஜாலியாகப் படமெடுத்தால் என்ன எனும் ஆசை வந்தது ஸ்ரீதருக்கும் சித்ராலயா கோபுவுக்கும். கோபு ஸ்ரீதரின் பால்ய நண்பர்; அவருடனேயே பயணித்தவர். நண்பரின் துணையுடன் ‘காதலிக்க நேரமில்லை’ எடுத்தார் ஸ்ரீதர். காஞ்சனாவையும் ரவிச்சந்திரனையும் அறிமுகப்படுத்தினார். ஆழியாறு பகுதியை, முதன்முதலாக அப்படியே திரையில் கொண்டு
வந்திருந்தார். அந்தக் காலத்தில் பேருந்தைக் கூட ‘கார்’ என்று சொன்ன மக்கள் அதிகம்.
‘காதலிக்க நேரமில்லை’ படம் தொடங்கியதும், ‘என்ன பார்வை உந்தன் பார்வை’ பாடலில், காஞ்சனா ஆடுவதை கார் கண்ணாடியில் காட்டுவார். காரில் முத்துராமன் உட்கார்ந்திருப்பார். பாட்டு முடிந்ததும் காரில் இருவரும் கிளம்புவார்கள். அப்போது ஓபனில் இருக்கும் கார், கொஞ்சம் கொஞ்சமாக டாப் பகுதி மூடிக்கொண்டே வரும். வாய் பிளந்து பார்த்தோம். எல்லாவற்றையும் விட முக்கியமாக, பாலையா எனும் மகா கலைஞனுக்கு அப்படியொரு அசத்தலான கதாபாத்திரத்தை வழங்கினார்!
பின்னர் ‘வெண்ணிற ஆடை’ எடுத்தார். ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி என பலரையும் அறிமுகப்படுத்தினார். ஆக, நமக்கு ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தி வைத்தவர் எனும் பெருமையும் ஸ்ரீதருக்கு உண்டு. மன ரீதியான உணர்வுகளையும் சிகிச்சைகளையும் கல்யாணமான அன்றே கணவனைப் பறிகொடுத்த இளம்பெண்ணையும் வைத்துக்கொண்டு, வில்லத்தனம், வில்லன் என எதுவுமின்றி, யாருமின்றி சூழல்களையே வில்லனாக்கினார்.
அதனால்தான் புதுமை இயக்குநர் என்றும் இளமை இயக்குநர் என்றும் தமிழ் சினிமா கொண்டாடிக் கொண்டே இருக்கிறது. இதேசமயத்தில் எம்ஜிஆரை வைத்து ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்துக்குப் பூஜை போட்டார். ஆனால் இது வண்ணப்படம் அல்ல. ஏனோ தெரியவில்லை… இவர்கள் இணைவது தடைப்பட்டது.
’நெஞ்சிருக்கும் வரை’ என்ற படத்தில், சிவாஜி, கே.ஆர்.விஜயா, முத்துராமன்,
வி.கோபாலகிருஷ்ணன். ஒருகட்டத்தில், மூவரைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும்.
அதுமட்டுமா? மேக்கப் கிடையாது. ‘முத்துக்களோ கண்கள்’ பாடலை அத்தனை இருட்டான வெளிச்சத்தில் எடுத்திருப்பார். கல்யாணப் பத்திரிகையை அப்படியே வாசிக்கும் பாடலாக ‘பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்று வைத்திருப்பார். சிவாஜி, காஞ்சனா நடித்த ‘சிவந்த மண்’ படம் இன்னொரு பிரம்மாண்டம். ‘பட்டத்து ராணி’ பாடலும், ‘ஒரு ராஜா ராணியிடம்’ பாடலும் ஸ்ரீதரின் பரீட்சார்த்த முயற்சிகள். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம் எனும் பெருமையும்
இந்தப் படத்துக்கு உண்டு. இதிலும் சிவாஜிக்கு மேக்கப் இருக்காது.
அந்தக் காலத்தில் ‘அவளுக்கென்று ஒரு மனம்’ மாதிரியாகவும் எழுபதுகளில் ‘இளமை
ஊஞ்சலாடுகிறது’ மாதிரியாகவும் நினைக்கவும் படமெடுக்கவும் மிகப்பெரிய துணிச்சல் வேண்டும் என்று பத்திரிகைகள் புகழ்ந்தன. இதில் பாரதி, அதில் ஜெயசித்ரா. நடுவே, அவர் எடுத்த ‘ஓ மஞ்சு’வும் வேறொரு முயற்சிதான். பின்னாளில், ‘துள்ளுவதோ இளமை’ மாதிரி படங்களை எடுப்பதற்கான தொடக்கத்தை ஸ்ரீதர் எப்போதோ செய்திருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுபதுகளில், ‘உரிமைக்குரல்’ என்று எம்ஜிஆரை வைத்து எடுத்தார். ‘மீனவ நண்பன்’ எடுத்தார். ரகுவரனை நாயகனாக்கி ‘ஒரு ஓடை நதியாகிறது’, மோகனை வைத்து ‘தென்றலே என்னைத் தொடு’, கார்த்திக்குடன் ‘நினைவெல்லாம் நித்யா’ என எண்பதுகளின் இயக்குநர்களுடனும் போட்டி போட்டார். கமல், ரஜினியை வைத்துக்கொண்டு ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் விளையாடியிருப்பார் ஸ்ரீதர். ‘தந்துவிட்டேன் என்னை’ படத்தில் ஆரம்பகாலத்திலேயே
விக்ரமை அறிந்து உணர்ந்தார்.
சினிமா எனும் ஒளிவடிவில் கடத்தும் விஷயத்துக்குள் என்னென்ன ஜாலங்களெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் அப்போதே சோதனை முயற்சியாக இறங்கி, ஜெயித்தும் காட்டியவர் ஸ்ரீதர். முக்கியமாக, மனித மனங்களைக் கண்ணாடி போல் பிரதிபலித்த அவரது படங்கள் சினிமா சரித்திரத்தில் தனியிடம் பிடித்து இன்றைக்கும் ராஜாங்கம் பண்ணிக் கொண்டிருக்கின்றன. நவீன இயக்குநர், இளமை இயக்குநர் ஸ்ரீதரை நம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்போதுமே!