• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மதம் மாறியவர்களை தாய் மதத்துக்கு அழைத்து வருவோம் : பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா

மதம் மாறியவர்களை தாய் மதத்துக்கு திருப்பி அழைத்து வருவோம். இதற்காக இந்துக் கோயில்கள், மடங்களுக்கு இலக்கு நிர்ணயித்து செயல்படுவோம் என பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா பேசியுள்ளார்.


பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா, அண்மையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். கடந்த சனிக்கிழமை (டிச.25) கிறிஸ்துமஸ் நாளன்று நடந்த இந்தக் கூட்டத்தில் தேஜஸ்வி சூர்யா பேசியது சர்ச்சையாகியுள்ளது.

இப்போதைக்கு இந்துக்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, பிற மதங்களுக்குச் சென்ற இந்துக்களை தாய் மதத்திற்கு திருப்பி அழைத்து வருவதே. பல்வேறு காலகட்டங்கள் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களுக்காக ஏராளமான இந்துக்கள் பிற மதங்களுக்கு மாற்றப்பட்டனர்.

பாகிஸ்தான் முஸ்லிம்கள் உள்பட அவர்களை அனைவரையும், தாய் மதமான இந்து மதத்திற்கு திருப்பி அழைத்துவர வேண்டும். ஆண்டாண்டு காலமாக இந்துக்களை மிரட்டி, துன்புறுத்தி, ஏமாற்றி பிற மத்திற்கு மாற்றியுள்ளனர். இந்த ஒழுங்கின்மையில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி, பிற மதங்களுக்குச் சென்ற இந்துக்களை தாய் மதத்திற்கு திருப்பி அழைத்து வருவதே. இதற்காக கோயில்கள், மடங்களுக்கு நாம் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். ஆண்டுக்கு இத்தனை பேரை தாய் மதத்துக்கு திருப்பி அழைத்துவருதல் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும். இவ்வாறு தேஜஸ்வி சூர்யா பேசியுள்ளார்.

அண்மையில் உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்வாரில் தர்ம சன்சாட் என்ற பெயரில் மத மாநாடு நடந்தது. அதில் பேசிய பலரும் வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களை முன்வைத்தனர். சிறுபான்மையினர் கொல்லப்பட வேண்டும் என்று கூட சிலர் பேசினர். இதில் இந்துத்துவா தலைவர் வாசிம் ரிஸ்வி என்ற ஜிதேந்திர நாராயன் தியாகி பேசுகையில் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பிரபாகரன் போலவும், பிந்த்ரன்வாலே போலவும் மாற வேண்டும்.

விடுதலைப்புலிகள் பிரபாகரன் போல இந்து இளைஞர்கள் மாறினால் ரூ.ஒரு கோடி தருகிறேன்’எனக் கூறியிருந்தார். இது தொடர்பாக போலீஸாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பெங்களூரு பாஜக எம்.பி. மதமாற்றம் குறித்து இலக்கு நிர்ணயித்து செயல்படும் சர்ச்சைக்குரிய யோசனையைத் தெரிவித்திருக்கிறார்.


கர்நாடகாவில் சட்டப்பேரவையில் அண்மையில் மதமாற்ற தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா இத்தகைய கருத்தைக் கூறியுள்ளது கவனம் பெறுகிறது.