• Thu. Apr 18th, 2024

கடவுளை விட நாங்கள் தான் பெரியவர்கள் – அறநிலையத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி…

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் 2006ஆம் ஆண்டு முதல் கோயிலில் பல்வேறு புனரைப்பு பணிகள் நடந்து வருகிறது. கோயில் கருவறையில் இருந்து உற்சவ மூர்த்தி சிலைகள் பாலாலயத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நான்கு ஆண்டுகளாக பூஜைகள் நடந்து வருகிறது.

கோயில் திருப்பணி வேலைகள் வேகமாக நடந்துவரும் சூழலில் கும்பாபிஷேக நாள் தேர்வு செய்வது மற்றும் பரிகார பூஜைகள் தொடர்பான தேவபிரசன்னம் பார்க்கும் நடக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலையில் நடைபெற்றது. கோயிலில் விசேஷ பூஜைகளுக்குப் பின்னர் கோயில் உதயமார்த்தாண்ட மண்டபம் எதிரில் உள்ள மண்டபத்தில் ராசி கட்டம் வரையப்பட்டு சோழி உருட்டி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது.

ராசி கட்டங்களில் பூஜைக்குப் பின்னர் சிறுவன் ஒருவனை வைத்து, விரும்பிய கட்டத்தில் தங்கம் வைக்கக் கூறிய பின்னர், அதன் அடிப்படையிலான விவரங்கள வாசுதேவன் பட்டத்திரி அவருடன் வந்திருந்த ஜோதிட நிபுணர்களுடன் ஆலோசித்து கூறினார்.


தேவ பிரசன்னத்தில் கூறியதாவது, “கோயிலில் பகவானின் தெய்வ அருள் எப்போதும் உள்ளது. ஆனால் பக்தர்களுக்கு சில தோஷங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் கோயில் கும்பாபிஷேகப்பணிகள் தாமதமாகிக்கொண்டே போகிறது. எனவே பக்தர்களின் தோஷங்கள் நீங்கவும், கும்பாபிஷகப்பணிகள் விரைந்து நடத்தவும் உடனே மிருத்துஞ்சயஹோமம் நடத்துவது பரிகாரமாக இருக்கும். கன்னி ராசியில் வியாழ தோஷம் உள்ளதால் ஈஸ்வரனை வழிபட்டு அதற்கான பரிகாரங்களை நடத்தினால் எதிர்காலத்தில் கோயிலை சிறப்பாக கொண்டு செல்ல முடியும்.

கடவுளுக்கு தோஷம் ஏற்படும் விதத்தில் இங்கே சில செயல்கள் நடந்துள்ளது. கடவுளை விட தாங்கள் தான் மிகவும் பெரியவர் என்ற எண்ணத்தில் சிலர் செயல் படுகிறார்கள். கோயில் தொடர்புடைய தேவிக்கான பரிகாரம் பூஜைகள் நடத்த வேண்டும். கோயில் சொத்துக்களை சிலர் அபகரித்து உள்ளதாக தெரிகிறது. கோயில் பொருட்கள் திருட்டு போயுள்ளது. இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமாக இருந்த சொத்தில் 40 சதவிகிதம் சொத்து கூட இன்று கோயிலில் இல்லை. கோயில் தொடர்புடைய காவுகள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

கும்பாபிஷேகத்துக்கு முன்னராவது அவற்றை மீட்டு வழிப்பாடுகள் நடத்த வேண்டும்.
கோயிலில் சுத்தமான சந்தனம் பகவானுக்கு சார்த்துவது இல்லை. எனவே சந்தனக் கட்டையை உரைத்து பகவானுக்கு சந்தனம் சார்த்த வேண்டும். கோயிலில் ஜாதி மத பேதமின்றி மக்கள் வழிபட வேண்டும். சுவாமி வாகனங்கள் புனரமைத்து சுவாமி எழுந்தருளலுக்கு பயன்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட எழுந்தருளல் பூஜைகளை முறையாக நடத்த வேண்டும். ஆகம ஆச்சார விதிகள் கடைபிடித்து கோயில் பூஜைகள் நடத்த வேண்டும்.” என கூறினார்.

நிகழ்ச்சியில் திருவட்டார் கோயில் மேலாளர் மோகன்குமார், அறநிலையத்துறை பொறியாளர் ராஜகுமார், கோயில் தந்திரிகள் சங்கரநாராயணரு, சஜித் சங்கரநாராயணரு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *