• Fri. Jul 31st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஆடு, மாடுகளுக்குத் தண்ணீரில் விஷம் வைக்கப்பட்டதா ?

BySeenu

Jul 31, 2026

கோவை, தெலுங்குபாளையம் அருகே உள்ள சொக்கம்புதூர் பகுதியில் டிரம்மில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீரைக் குடித்த 11 ஆடுகள் மற்றும் 3 மாடுகள் ஒரே மணி நேரத்தில் மர்மமான முறையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

​கோவை, தெலுங்குப்பாளையம் அருகே உள்ள சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா – ராமாவதி. இவர் அப்பகுதியில் சொந்தமாக ஆடு, மாடுகளை வளர்த்துத் தனது வாழ்வாதாரத்தைக் கொண்டு செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி இவருக்குச் சொந்தமான 3 மாடுகள் மற்றும் 11 ஆடுகள் அங்கு இருந்த பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீரைக் குடித்து உள்ளன.

​தண்ணீரைக் குடித்த சிறிது நேரத்திலேயே விலங்குகள் அனைத்தும் அடுத்தடுத்து மர்மமான முறையில் சுருண்டு விழுந்து, ஒரே மணி நேரத்திற்குள் பரிதாபமாக உயிரிழந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபா – ராமாவதி மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கும், விலங்குகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

​தகவல் அறிந்த கோவை மாவட்ட விலங்குகள் வதைத்தடுப்புச் சங்க அதிகாரி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

விலங்குகள் குடித்த தண்ணீரில் யாரேனும் மர்ம நபர்கள் விஷம் கலந்தனரா ? அல்லது வேறு ஏதேனும் நச்சுத்தன்மை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதா ? என்ற கோணத்தில் காவல் துறையினரும் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான விலங்குகளின் மாதிரிகள் மற்றும் டிரம் தண்ணீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

கோவையில் ஒரே நேரத்தில் 14 கால்நடைகள் மர்மமாக பலியான சம்பவம் விவசாயிகள் இடையே சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.