கரூரில் என்ன நடந்தது என்பதை விசாரிக்க வந்துள்ளோம் என்று ஹேமமாலினி தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்படி கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை நேரில் விசாரிக்க எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ஹேமமாலினி எம்.பி. ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.இந்த நிலையில் ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அனுராக் தாக்கூர் எம்.பி.”இன்று மாலை வரை கரூரில் இருந்து அனைவரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளோம். உயிரிழந்த 41 நபர்களின் குடும்பங்களை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளோம்,”என்றார்.
இதே போல் ஹேமமாலினி பேசுகையில், “கரூரில் என்ன நடந்தது என்பதை விசாரிக்க வந்துள்ளோம். இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்கக் கூடாது. முதலில் உறவுகளை இழந்து தவித்து கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளோம். கரூரில் ஆய்வு செய்தபின் பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் அறிக்கை அளிப்போம்.”இவ்வாறு கூறினார்.