புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் அருகே உள்ள நெருஞ்சி பட்டி என்ற கிராமத்தில் அந்த ஊரில் ஐயராக இருந்தவரின் நிலத்தை 100 ஏக்கருக்கு மேல் அந்த ஊரில் உள்ளவர்கள் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்திருக்கிறார்கள்.

ஆண்டுதோறும் விளையும் நெல்லில் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஏக்கருக்கு இவ்வளவு என்று பேசி கொடுத்து வந்திருக்கிறார்கள். இப்போது அந்த நிலங்களின் உரிமையாளர்களான குடும்பம் இந்த ஊரில் இல்லாமல் அமெரிக்காவில் வசிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் குத்தகைக்கு விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து குத்தகைக்கு உண்டான நெல்லை வாங்கி ஒருவர் மட்டும் ஏஜெண்டாக இருந்து அவர்களுக்கு உரிய தொகையை அனுப்பி வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவிலிருந்து யாரும் இங்கு வரவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் குத்தகைக்கு விவசாயம் செய்த நிலங்களில் சுமார் 30 ஏக்கர் நிலங்களை திருச்சியை சேர்ந்த ஒருவர் வந்து இந்த நிலத்திற்கு நான் பவர் ஏஜெண்டாக இருக்கிறேன்.


எனவே அனைவரும் இந்த நிலத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். அதனால் பதறிப்போன இதுவரை விவசாயம் செய்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அருணா அவர்களை சந்தித்து இது குறித்து புகார் மனு கொடுத்ததோடு இதுவரை விவசாயம் செய்த நிலங்கள் எங்களுக்கு தான் வழங்க வேண்டும் பட்டா வேறு யார் பெயரில் இருந்தாலும் எங்கள் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் பேட்டியும் அளித்திருக்கிறார்கள்.




