

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து 58 கிராம திட்டக் கால்வாயில் இருந்து 150 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின்படி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் ஆகியோர் முன்னிலையில் 150 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டங்களிலுள்ள கண்மாய்களுக்குச் செல்லும் 58 கிராம திட்டக் கால்வாயில் இன்று முதல் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பால் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தில் 1,912 ஏக்கர் நிலங்கள் பாசனப் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 373 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 2,285 ஏக்கர் நிலங்கள் கண்மாய்கள் பயன்படும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட தண்ணீருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தண்ணீர் திறப்பிற்கு மதுரை மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
