

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சிவகாசி சட்ட மன்ற தொகுதி கழகம் சார்பில் எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கழக துணை செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி, நடிகை விந்தியா, தலைமை கழக பேச்சாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
மத்தியில் அண்ணா திமுகவின் கரம் ஓங்குவதற்கு மத்தியிலே மத நல்லிணக்கத்தை உருவாக்க, சிறுபான்மை மக்களுக்கு எல்லா உதவிகளும் கிடைப்பதற்கு பெரும்பான்மையுடன் சிறுபான்மை மக்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் நிறுத்தும் வேட்பாளருக்கு இரட்டை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அண்ணா திமுகவில் இளைஞர்கள் கூட்டம் வீறுகொண்டு வந்துள்ளது.
திமுக ஆட்சியில் ஏழை, எளியவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. வட- தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட அரசாங்கப் பிரதிநிதிகள் யாரும் முதலில் வரவில்லை, வெள்ள பாதிப்பால் தமிழக அமைச்சரவையே முடங்கிப் போயுள்ளது இன்று தமிழ்நாட்டில் விளையாட்டாக விளையாட்டு ஆட்சி தான் நடக்கிறது. அனைத்து விலைவாசிகளும் உயர்ந்து, வரி யினங்களும் கூடுதலாகி விட்டது. அதிமுக ஆட்சியில் வரிகள் உயர்த்தப்படாமல், விலைவாசிகள் உயராமல் கட்டுக்கோப்பில் வைக்கப்பட்டிருந்தது.
கொடுக்கின்ற ஆட்சியாக எடப்பாடியார் ஆட்சி இருந்தது. வேட்டியை மடித்துக் கொண்டு தூத்துக்குடி வெள்ளத்தில் முதல் ஆளாக களம் இறங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.திமுக ஆட்சிக்கு வந்து தாலிக்கு தங்கம் கொடுக்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தை எல்லாம் நிறுத்தி விட்டனர். 10 பேரிடம் கேட்டால் 8 பேர் எடப்பாடி ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என கூறுகிறார்கள்.மக்கள் சிந்திக்க துவங்கி விட்டனர்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஏழைகளுக்காக துவங்கப்பட்ட இயக்கம். பட்டாசு தொழிலாளர்கள், பட்டாசு உரிமையாளர்கள், விவசாயிகள் யாருக்கு பிரச்சினை என்றாலும் எடப்பாடியை பார்க்கலாம் பிரச்சனை தீர்த்து வைப்பார்.
திமுக விற்கு ஓட்டு போட்ட மக்கள் தவிக்கிறார்கள். விலைவாசி உயர்ந்து விட்டது. மின் கட்டண உயர்வு என அனைத்தும் உயர்ந்துவிட்டது பொற்கால ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி வர வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா பேசும்போது,

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழிலதிபர் அம்பானியை அழைக்காமல் நடிகை ஆண்ட்ரியாவை அழைத்து நடத்தியுள்ளனர். கடந்த 10 வருட அதிமுகவின் சோதனையான ஆட்சியின் போது தமிழகத்தில் 3 லட்சம் கோடி கடன் இருந்தது. கடந்த ரெண்டரை ஆண்டுகால திமுக ஆட்சியில் எட்டு லட்சம் உயர்வடைந்துள்ளது. ஆளத் தெரியாத திமுகவால் தற்போது ஒவ்வொரு தமிழனுக்கும் தலைக்கு 2 லட்சம் கோடி கடன் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி நடத்துவது போல் காட்சி தான் நடக்கின்றது. ஆளுங்கட்சி பிரதிநிதிகள் யாரும் யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்து வரும் சூழலில், அனைவரையும் பார்த்து பயப்படும் முதல்வர் ஸ்டாலின் தன்னை சர்வாதிகாரி என காட்டிக் கொள்கிறார். ஆனால் மோடியிலிருந்து, டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் வரை அனைவரையும் கெட் அவுட் என எடுத்தெறிந்து எடுத்த முடிவில் உறுதியாக நிற்பவர் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த தேர்தலின் போது தப்பு செய்தது அதிமுகவினர் அல்ல. திமுகவின் போலியான தேர்தல் வாக்குறுதியை கேட்டு ஏமாந்து ஓட்டு போட்டது மக்கள்தான். எனவே இனியும் தமிழக மக்கள் ஏமாறாமல் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வெற்றி பெறச் செய்தால்,அவர்கள் டெல்லியில் தமிழக மக்களை காக்கும் காவல் தெய்வமாக விளங்குவார்கள் என்றார்.
கூட்டத்தில் கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், மாவட்ட மகளிரணி செயலாளா் சுபாஷினி, மாநகராட்சி பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாம் (எ) ராஜஅபினேஷ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமிநாராயணன், வெங்கடேஷ், கருப்பசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரமணா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட கலை பிரிவு செயலாளர் மாரிமுத்து, மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் இளநீர்செல்வம், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையதுசுல்தான், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்கள் சீனிவாசபெருமாள், தொகுதி கணேசன், செல்வகுமரன், கார்த்திக், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கூடலிங்கம், சிவகாசி வர்த்தக அணி செயலாளர் பாண்டி(எ) டேக்கர் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பலராம் செய்திருந்தார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பிலிப்வாசு நன்றி கூறினார்.


