புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் ரயில்வே கேட்டில் இருந்து தேக்காட்டூர் செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் பிரதான சாலை சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது.


இந்தச் சாலையை அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அப்பகுதியில் பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. இதனால் சாலையை பயன்படுத்தும் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள், வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். இதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.


காரணம் சம்பந்தப்பட்ட சாலை தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் இருப்பதால் ரயில்வே துறை ஒப்புதல் அளித்தால் மட்டுமே சாலையை புணரமைக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் சாலையை தேக்காட்டூர் ஊராட்சியில் ஒப்படைக்க ஊராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தெற்கு ரயில்வே செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே கடந்த வாரம் சம்பந்தப்பட்ட சாலையை கடந்து முன்னால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவரும், முன்னாள் திருமயம் தொகுதி எம்எல்ஏவுமான பி.கே.வைரமுத்து சென்றார்.

அப்போது அப்பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்த பெண்கள் முன்னாள் எம்எல்ஏ பி கே வைரமுத்து காரை கண்டவுடன் காரை நிறுத்தி குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட முன்னால் எம்எல்ஏ கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக பொதுமக்களிடம் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ பி.கே. வைரமுத்து அவரது சொந்த செலவில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க முடிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து ரூ.1.10 லட்சம் மதிப்பில் சாலையை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுத்து நேற்று சாலை சீரமைக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்த ஒரு சில நாட்களில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.கே.வைரமுத்துவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.




