திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்த கிராம ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பாவிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் தை முதல் நாள் தை பொங்கல் தினத்தன்று மதுரை மாவட்டத்தில் முதன்முதலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கடந்த சில ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமே நேரடியாக நடத்தி வருகிறது.
இதனை அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறுவது போல அவனியாபுரத்திலும் கிராம கமிட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு விழா கமிட்டி சார்பில் அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு குழு தலைவர் பி.முருகன் தலைமையில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பாவிடம் வருகின்ற ஜன.15 ம் தேதி பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை அவனியாபுரம் கிராமத்தில் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொது கமிட்டி மூலம் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவை சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பாவிடம் வழங்கினர். அவர் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து பொதுமக்களை அனுப்பி வைத்தார். மேலும் கிராம மக்கள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.




