

ஆண்டிபட்டி அருகே டி.புதூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் டி.சுப்புலாபுரம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி – சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒருமாதமாக டி.புதூர் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்காரணமாக குடிநீருக்காக அப்பகுதி மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டி.புதூர் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் டி.சுப்புலாபுரம் கிராமத்திற்கு வந்து சாலை அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தபட்ட டி.புதூர் கிராமத்திற்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
