வேடசந்தூர் அருகே ஆறரை பவுன் தங்க நகைக்காக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சிறுவனை கைது செய்தனர்.
வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர் பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர் தனது தோட்டத்து வீட்டில் மனைவி பத்மினியுடன் வசித்து வருகிறார். இவர் விவசாயமும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவரின் தோட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புலங்கட்டி நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல்(வயது 16) என்ற சிறுவன் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் வட்டி பணத்தை வசூல் செய்து கொடுக்கும் வேலையும் செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி மாரியப்பன் திடீரென உயிர் இழந்தார். வயது மூப்பின் காரணமாக மாரியப்பன் இறந்திருக்கலாம் என்று நினைத்த குடும்பத்தினர் அவரது உடலை அதே பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து மாரியப்பனின் மகன் பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் பார்த்த போது, மாரியப்பன் வைத்திருந்த 6 1/2 (ஆறரை) பவுண் தங்க நகைகள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் வாங்கி வைத்திருந்த ஆவணங்கள் மாயமாகி இருந்தன.
இதுகுறித்து கதிர்வேலிடம் பன்னீர் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பன்னீர் இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
வேடசந்தூர் போலீசார் கதிர்வேலை பிடித்து துருவி, துருவி விசாரணை செய்தனர். அப்போது கதிர்வேல் தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து மாரியப்பனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீஸ் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. மாரியப்பன் வீட்டில் வேலை பார்த்து வந்த கதிர்வேல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மாரியப்பன் வீட்டில் வைத்திருந்த 6 1/2 (ஆறரை) பவுண் தங்க நகைகளை திருடிச் சென்று வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்து 2 1/2 லட்சம் (இரண்டரை லட்சம்) பணம் பெற்றுள்ளார்.
மேலும் அந்தப் பணத்தை தனியாக அவர் வட்டிக்கு கொடுத்து வசூல் செய்து வந்துள்ளார். வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் மாயமானதால், தங்க நகைகளை நீ எடுத்தாயா என்று மாரியப்பன் கதிர்வேலிடம் விசாரித்துள்ளார்.
இதனால் தன் மீது மாரியப்பன் போலீசில் புகார் செய்து விடுவாரோ என்று பயந்த கதிர்வேல் தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரைகளை வாங்கி குளிர்பானத்தில் கலந்து கொடுத்து மாரியப்பனை கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து நேற்று போலீசார் அடக்கம் செய்த மாரியப்பனின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர். மேலும் கதிர்வேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். 6 1/2 பவுண் தங்க நகைகளுக்காக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியை சிறுவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.