• Wed. May 8th, 2024

விஜயகாந்தின் இனிக்கும் இளமை அனுபவம்!

இனிக்கும் இளமை விஜயகாந்தின் முதல் திரைப்படம். 1979 மார்ச் 16-ஆம் தேதி வெளியானது. நேற்றுடன் 43 வருடங்களை நிறைவு செய்து இன்று 44 வது வருடத்தில் இனிக்கும் இளமை காலடி வைக்கிறது.
இந்தப் படத்தில் சுதாகர் நாயகனாகவும், ராதிகா நாயகியாகவும் நடித்திருந்தனர். விஜயகாந்த் வில்லன்.

எம்.ஏ.காஜா எழுதி இயக்கியிருந்த இந்தப் படம் அந்தக்காலத்தில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றது. படத்தில் இடம்பெறும் காட்சி, வசனங்களுக்காக இந்த ‘ஏ’ சான்றிதழ் தரப்பட்டது. சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.சைலஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய, ‘மாலை மயங்கினால் இரவாகும், இளம் மங்கை மயங்கினால் உறவாகும்’ என்ற அற்புதமான பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றதுதான்.
படத்தில் உசிலைமணியை வைத்து காமெடிக் காட்சிகள் வைத்திருந்தார் இயக்குனர் காஜா. ஐயரான உசிலைமணியின் குடுமி ஒரிஜினலா இல்லை போலியா என்ற சவாலில் அவரது குடுமியை பகோடா காதர் பிடித்திழுப்பது போல் காட்சி வைக்கப்பட்டிருந்தது. உசிலைமணியின் மனைவிக்கு அவர் மீது ப்ரியம் உண்டாக பகோடா காதர் ஐடியா தரும் காட்சிகளும் உண்டு.

இவை சில பத்திரிகைகளுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. ‘இதெல்லாம் ஹாஸ்யங்களா, அந்த ஹாஸ்யத்தின் தலையில் இடிவிழ’ என விமர்சனத்தில் சாபமிட்டது ஒரு பத்திரிகை.

இனிக்கும் இளமை ஓடவில்லை. தயாரிப்பாளருக்கு நஷ்டம். ஆனால், இன்னொரு வகையில் இந்தப் படம் முக்கியமானது. இந்திய சினிமாவில் அனைவரும் அனுபவப்படும் ஒரு விஷயம் பாரபட்சம். நாயகன், நாயகி, இயக்குனர், ஒளிப்பதிவாளர் போன்ற முன்னணி நபர்களுக்கு படப்பிடிப்புத்தளத்தில் கிடைக்கும் மரியாதையும், கவனிப்பும் மற்றவர்களுக்கு கிடைக்காது. அதனை எதிர்பார்ப்பதும் ஒருவகையில் சரியல்ல. ஆனால், சாப்பாட்டில் காட்டப்படும் பாகுபாடு மிகவும் மோசமானது.

நாயகன், நாயகி, இயக்குனர் போன்றவர்களுக்கு ஸ்பெஷலான அசைவ சாப்பாடு தரப்படும். மற்றவர்களுக்கு சைவ சாப்பாடு. இப்போது இந்த வித்தியாசம் இன்னும் பெரிதாகிவிட்டது. நாயகன், நாயகிக்கு அவர்கள் சொல்லும் ஸ்டார் ஹோட்டல்களிலிருந்து உணவு தருவித்து தர வேண்டும். சிக்கன் ஓரிடத்தில், மட்டன் ஓரிடத்தில், சோறு இன்னொரு இடத்தில் என்று புரொடக்ஷன் ஆள்கள் ஓடிக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களுக்கு யூனிட்டில் போடும் சாப்பாடு எதுவோ அதுதான்.

இனிக்கும் இளமை படப்பிடிப்பில் நாயகன் சுதாகருக்கும், நாயகி ராதிகாவுக்கும் ஸ்பெஷல் அசைவ சாப்பாடும், வில்லன் விஜயகாந்துக்கு மற்றவர்களைப்போல சாதாரண சைவ சாப்பாடும் போட்டிருக்கிறார்கள். மதுரையில் சொந்தமாக மில் உள்பட ஏராளமான சொத்துக்கள் விஜயகாந்துக்கு உண்டு. உணவில் காட்டப்பட்ட இந்த பாரபட்சம் அவரை உறுத்தியது. அவர் நாயகனாகி, சொந்தப் படம் எடுக்கையில் ஒரு விதியை கொண்டு வந்தார். நாயகன், நாயகி, இயக்குனர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கு அளிக்கப்படும் அதே சாப்பாடு தான் யூனிட்டில் உள்ள மற்றவர்களுக்கும் என்ற நிலைப்பாடை கொண்டு வந்தார்.

விஜயகாந்தின் படம் என்றால், அது வேறொருவர் தயாரிப்பாக இருந்தாலும் உணவு மட்டும் கடைகோடி ஊழியனுக்கும் ஸ்பெஷலாகவே இருக்கும். அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விஜயகாந்துக்குள் விதைத்தது இனிக்கும் இளமை பட அனுபவம் தான். கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்பார்கள். இனிக்கும் இளமையில் விஜயகாந்துக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் பிற்காலத்தில் பலரது இனிப்பான அனுபவத்துக்கு காரணமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *