• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை

சமீப காலமாக விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் என எண்ணிய ரசிகர்களுக்கு, விஜய் தொடுத்த வழக்கால் ஏமாற்றம் மட்டுமே.

இந்தநிலையில், மறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2026-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் போஸ்டர்களை ரசிகர்கள்ஒட்டியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் இது பரபரப்பானது.

இதையடுத்து நடிகர் விஜய் ஒப்புதலோடு அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “சமீபகாலமாக, இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் விஜய்யை பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை விஜய் படத்துடன் இணைத்தும், அவசியமற்ற வார்த்தைகளை உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

ரசிகர்கள் மற்றும் இயக்கத்தினரின் இச்செயல்களை அவ்வப்போது விஜய் அனுமதியோடு கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும், இதுபோன்ற செயலில் ரசிகர்கள் மற்றும் இயக்கத்தினர் தொடர்ந்து ஈடுபடுவது வருத்தத்துக்கு உரியது.

இதுபோன்ற செயல்களை விஜய் என்றும் விரும்புவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் இப்படிப்பட்ட விஷயங்கள் தொடரும் பட்சத்தில், விஜய்யின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விஜய் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று அறிக்கையில் கூறியுள்ளார்.