தமிழக எம்.பி களை தாக்கி மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் அவதூறு பேச்சு: விஜய் வசந்த் எம். பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

7.5 கோடி தமிழ் நாட்டு மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களை நாகரீக மற்றவர்கள் என இன்று பாராளுமன்றத்தில் அவதூறு பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும், சபாநாயகர் அவர்கள் அவரது பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இன்று மக்களவையில் புதிய கல்வி கொள்கை குறித்து நடந்த விவாதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறினார். மேலும் தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பாராளுமன்ற சபை என்று கூட பாராமல் அவதூறுகளை கூறினார். ஒரு மத்திய அமைச்சருக்கு இது ஒருபோதும் பொருந்தாத ஒன்று.
அவரது சொற்கள் தமிழகத்தின் வாக்காளர்கள் மீதான தாக்குதல். தமிழ்நாடு மீது மத்திய அரசு கொண்டுள்ள பாரபட்சமான நிலைப்பாடு மீண்டும் தெரிய வந்துள்ளது.
அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் பிரதமர் அவர்கள் திரு தர்மேந்திர பிரதான் அவர்களை அமைச்சரவிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும். சபாநாயகர் அவர்கள் தமிழக மக்களுக்கு எதிராக அமைச்சர் கூறிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.




